கணவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்.. மனம் உடைந்து போன ரோபோ சங்கர் மனைவி.. என்ன நடந்தது?
சென்னை: சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து வெள்ளித்திரையில் சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். அவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையுமே சோகத்தில் தள்ளியது. குறிப்பாக அவரின் மனைவி பிரியங்காவை நிலைகுலைய செய்துவிட்டது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார். இந்நிலையில் தனது கணவர் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் கலங்க வைக்கிறது.
மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் தனுஷ் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். மிமிக்ரி, டைமிங் காமெடி, பாடி பில்டிங் என பல துறைகளில் தன்னை நிரூபித்த அவர்; சினிமாவிலும் அறிமுகமான முதல் படத்திலேயே ஸ்கோர் செய்துவிட்டு சென்றார். அவரது நடிப்பில் ஈர்க்கப்பட்ட தனுஷ்; தங்க செயின் ஒன்றையும் பரிசாக கொடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது. மாரி படத்துக்கு பிறகு வரிசையாக பல படங்களில் காமெடி ரோலிலும், குணசித்திர வேடத்திலும் நடிக்க ஆரம்பித்தார் ரோபோ.

தப்பி பிழைத்த ரோபோ சங்கர்: அவரது கரியர் பீக்கில் இருந்தபோது தேவையில்லாத சில தீய பழக்கங்களுக்கு அடிமையானார் சங்கர். அதன் காரணமாக உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அவரை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என குடும்பத்தினரும், நண்பர்களும் எடுத்த முயற்சிகள் பலன் அளித்தன. எனவே மரண வாசல் வரை சென்று பத்திரமாக திரும்பி வந்தார். அதனையடுத்து தன்னுடைய வாழ்க்கையை புதிதாக வடிவமைத்த அவர்; எந்த தீய பழக்கத்தையும் தன்னிடம் அண்ட விடவே இல்லை. கரியரிலும் முழு கவனத்தை செலுத்தினார்.
உயிரிழந்த ரோபோ: அனைத்தும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சூழலில்; கடந்த வருடத்தில் ஷூட்டிங் ஒன்றில் கலந்துகொண்டு நடித்தார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட; உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி உயிரிழந்தார். சங்கர் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதீத திறமையாளர் இப்படி சின்ன வயதிலேயே போய்விட்டாரே என்று அனைவரும் கண்கள் கலங்கினர்.
மீண்டு வரும் குடும்பம்: அதுவும் ரோபோ சங்கர் இறக்கும் சில காலத்துக்கு முன்புதான் அவரது மகளுக்கு திருமணம் நடந்தது. மேலும் ஒரு பேர பிள்ளையும் பிறந்தார். அனைத்தும் ஒன்றுகூடி வந்த நேரத்தில் சங்கர் தவறியது அவரது குடும்பத்தை நிலைகுலைய செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவரது மகள் இந்திரஜாவும், மனைவி பிரியங்காவும் மெல்ல மெல்ல சங்கர் இறப்பிலிருந்து மீண்டு வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா கொடுத்த பேட்டி ஒன்று கலங்கும்படி அமைந்திருக்கிறது.
பிரியங்கா சொன்னது: அவர் கொடுத்த பேட்டியில், "என் கணவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு அமைதியாக அவர் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தேன். ஆனால், நான் அப்படியே அமைதியாக போகமாட்டேன் என சொல்வதை போன்று 'ஈகோ ராமன்' திரைப்படத்தின் கடைசி 15 நிமிடங்களில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருக்கிறார். என் கணவரை ரொம்பவே மிஸ் செய்கிறேன்"என்றிருக்கிறார். கணேசன் நாச்சிமுத்து என்பவர் இயக்கியிருக்கும் ஈகோ ராமன் படம் மே 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதில் ரோபோ சங்கர் முக்கியமான கேரக்டரை ஏற்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
