ரஜினியை சந்தித்த தூய்மை பணியாளர் பெண்.. உள்ளே போனது முதல் தங்க செயின் வரை.. மனம் திறந்து பேசிட்டாங்க
சென்னை: ஜெயிலர் 2 படத்தில் இப்போது நடித்துவரும் ரஜினிகாந்த் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும், கமல்ஹாசனுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சென்னையில் தூய்மை பணியின்போது கிடைத்த 45 பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது நேர்மையை பலரும் பாராட்டிய நிலையில்; ரஜினிகாந்த் நேரில் அழைத்து பத்மாவுக்கு தங்க சங்கிலி பரிசளித்தார்.
இந்தியாவில் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலையில் எப்படி தங்கத்தை வாங்கி சேமித்து வைத்து நல்ல காரியங்களை நடத்துவது என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர் தூய்மை பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது குப்பையில் 45 பவுன் தங்க நகை கிடந்ததை அவர் பார்த்தார்.
நேர்மையில் ஜொலித்த பத்மா: உடனடியாக அதை எடுத்து வைத்துக்கொள்வோம் என்ற கீழ்த்தர எண்ணத்தை கொண்டிருக்காமல்; அதை எடுத்து காவல் நிலையத்தில் நேர்மையுடன் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து அந்த நகை உரியவர்களிடம் சேர்ந்தது. வறுமையிலும் பத்மாவின் நேர்மையை பார்த்த அனைவரும் அவரை பாராட்டினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.

ரஜினியும் பாராட்டு: சூழல் இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இன்று பத்மாவை தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்தார். தனது குடும்பத்துடன் வந்த பத்மாவை பாராட்டி சால்வை அணிவித்து; தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகின. மேலும் பத்மாவை அழைத்து பாராட்டிய ரஜினிக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்தினையும், பாராட்டையும் தெரிவித்தார்கள்.
பத்மா பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த்தை சந்தித்தது குறித்து பத்மா பேசுகையில், "ரஜினிகாந்த்தை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அவரை நேரில் சந்திப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தவர்களுக்கு நன்றிகள்" என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய பத்மாவின் கணவர், 'என் மனைவி செய்திருக்கும் செயல் தூய்மை பணிக்கே பெருமை சேர்த்திருக்கிறது' என்றார்.
கணவரும் அப்படி: பத்மா மட்டுமின்றி அவரது கணவரும் அண்மையில் கேட்பாரற்று கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாயை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பத்மாவின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்களாம். வறுமையிலும் நேர்மையை தவறாமல் கடைப்பிடித்தால் நினைத்து பார்க்காத விஷயங்கள் எல்லாம் தானாகவே நடக்கும் என்பதற்கு பத்மாவும் அவரது கணவரும் உதாரணமாகியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











