ரஜினியை இழிவுபடுத்தவில்லை- இந்திப்பட இயக்குநர்
மும்பை: மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்தில் ரஜினியை இழிவுபடுத்தவில்லை என்று இயக்குநர் பைசல் சாயிப் மறுத்துள்ளார்.
தன்னை களங்கப்படுத்தும் வகையில் இந்தியில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக திடீர் வழக்கு தொடர்ந்தார் ரஜினிகாந்த்.
அவர் தாக்கல் செய்த மனுவில் மும்பையில் உள்ள அர்ஷா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம், "மே ஹுன் ரஜினி'' (நான்தான் ரஜினி) என்ற பெயரில் இந்தியில் படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் என்னை போன்ற உருவ அமைப்புள்ள நடிகரை வைத்து என்னுடைய வசனங்களைப் பேசி, என்னை இமிடேட் செய்வது போல நடித்து என் பெயரை சீர்குலைக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடனும் என் பெயரை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் படத்தை எடுக்கின்றனர். எனவே இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தடை
வழக்கை விசாரித்த நீதிபதி மே ஹுன் ரஜினிகாந்த் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.

முதல் வழக்கு
எத்தனையோ பேர் ரஜினி பெயரைப் பயன்படுத்தினாலும், ரஜினி இதுவரை யார் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தது இல்லை. இது அவரது முதல் வழக்கு என்பதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெயர் மட்டும்தான்
ரஜினி குற்றச்சாட்டுகளுக்கு ‘மெய்ன் ஹுன் ரஜினிகாந்த்' படத்தின் இயக்குநர் பைசல் சாயிப் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரை புண்படுத்தி ஒரு போதும் படம் எடுக்க மாட்டேன். இந்த படத்தில் ரஜினியின் பெயர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. அவர் சம்பந்தப்பட்ட வேறு எந்த காட்சிகளும் படத்தில் இல்லை.

ரஜினி வாழ்க்கை அல்ல
ரஜினிக்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுக்கும் படமாகவே இது இருக்கும். அவருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் படமாக இருக்காது.
படத்தில் கதாநாயகனுக்கு ரஜினிகாந்த் என பெயர் மட்டுமே வைத்துள்ளோம். இது ரஜினியின் வாழ்க்கை கதை அல்ல.

பார்க்காமலேயே
படத்தை பார்க்காமலேயே ரஜினி வழக்கு தொடர்ந்தது ஏன் என்று புரியவில்லை. ரஜினி வக்கீல்கள் மூலம் அணுகினால் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த தயாராக இருக்கிறோம்.
நீதிமன்றத்திலிருந்து இதுவரை எங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை. வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்," என்றார்.

ஆதித்ய மேனன்
இந்த படத்தில் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஆதித்ய மேனன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் எற்கனவே பில்லா, அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவர் கூறும்போது, ‘‘ரஜினியை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை. இது காமெடி படம். ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கும். தடை நீக்கப்படும் என்று நம்புகிறேன்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











