எந்த நடிகரையும் படமெடுக்க ஆசைப்பட்டதில்லை!- இசைஞானியின் 'முதல் பிரஸ் மீட்!'
ஒரு புகைப்படக்காரராக எந்த நடிகரையும் படமெடுக்க ஆசைப்பட்டதில்லை, என்றார் இசைஞானி இளையராஜா.
சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் நடைபெறும் இளையராஜாவின் புகைப்படக் கண்காட்சியையொட்டி இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.

'முதல் சந்திப்பு'
உடல் நலம்பெற்ற பிறகு செய்தியாளர்களை முதல் முறையாக அவர் சந்தித்ததால், ஏராளமானோர் வந்திருந்தனர். மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.

அரைமணி நேரம்
மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி இந்த சந்திப்புக்கு வந்திருந்த ராஜா, தனது வழக்கமான வெள்ளை உடை, வெள்ளந்தியான சிரிப்பு, கலகலப்பான பதில்கள்.. என அரை மணி நேரம் அனைவர் மனதையும் நிறைத்தார்.
அவரிடம் நிறைய பேர் கேள்விகளை கேட்கத் துடித்தனர். அப்படிக் கேட்டதிலிருந்து சில கேள்விகளும் அவற்றுக்கு இளையராஜா தந்த பதில்களும்...

பிடித்த ஒளிப்பதிவாளர்.,..
உங்களுக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர்?
பாலு மகேந்திரா, பிசி ஸ்ரீராம். இவர்கள் வைக்கும் பிரேம்கள் அத்தனை கச்சிதமாக இருக்கும்.

எந்த நடிகரும் இல்லை
எந்த நடிகரையாவது படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டதுண்டா?
இல்லை... எந்த நடிகரையும் படமெடுக்க ஆசைப்பட்டதில்லை. என் அம்மா ஒரு முறை உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, அவருக்கு மருத்துவர் ஊசிபோட்டார்கள். அம்மாவுக்கு ஊசி என்றால் பயம். அவரது அந்த பயத்தை படமெடுத்து வைத்திருக்கிறேன்.

மறக்கமுடியாத படம்
புகைப்படமெடுத்த போது மறக்க முடியாத தருணம்?
ஒரு முறை தெருவில் ஒரு ஏழைச் சிறுமியைப் படமெடுத்தேன். படமெடுத்து முடிந்ததும் அந்த சிறுமிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என எண்ணி சுற்று முற்றும் பார்க்கிறேன். அந்தப் பெண் மாயமாகிவிட்டிருந்தால். அவளுக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது.

வேண்டாத வேலை
உங்களைக் கேமராவும் கையுமாகப் பார்த்து, உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று யாராவது கேட்டிருக்கிறார்களா?
இசையமைப்பதே கூட ஒரு வேண்டாத வேலைதானே!
-இப்படிப் போனது கேள்வி பதில் நேரம்.

ரொம்ப ஸ்ட்ரிக்ட்
இந்தக் கண்காட்சிக்காக படங்களைத் தேர்வு செய்தவர்களிடம் ராஜா ரொம்ப ஸ்ட்ரிக்டாக சொன்னது, 'நான் எடுத்த எந்தப் படத்திலும் சின்ன பகுதியைக் கூட கட் பண்ணாமல் உள்ளது உள்ளபடி அப்படியே வெளியிட வேண்டும்' என்பதுதானாம்.

எப்படி இருக்கு கண்காட்சி?
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான படங்கள் இயற்கையின் பல்வேறு படிநிலைகள் சார்ந்தவையே. கோயில்கள், திருவண்ணாமலை, கடல், மீனவர்கள், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், டெல்லி... இப்படி பல்வேறு பகுதிகளைப் படம்பிடித்திருக்கிறது ராஜாவின் கேமரா. மனிதர்களின் வாழ்வியலை அற்புதமாக கேமராவுக்குள் சிறைப்பிடித்திருந்தார். பர்ஸ்ட் ஆப் ஹோப் என்ற ஒரு படம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

காரிலிருந்தபடி...
பல படங்களைப் பார்த்தபோது, ஒரு தொழில்முறைப் புகைப்படக் கலைஞர் கூட இத்தனை நுணுக்கமாக படமெடுத்திருப்பாரா என்ற வியப்பு மேலோங்கியது.
இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படங்களை இளையராஜா தனது காரில் அமர்ந்தபடிதான் க்ளிக்கினாராம்!


Click it and Unblock the Notifications











