“சினிமாவில் நிறைய அனுபவங்கள் பார்த்தாச்சு”: தீடீர்ன்னு எல்லாருக்கும் நன்றி சொன்ன நாக சைத்தன்யா
ஐதராபாத்: தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோவான நாக சைத்தன்யா, இந்தியில் 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ள நாக சைத்தன்யா, 'லால் சிங் சத்தா' படத்தில் அமீர்கானின் நண்பனாக நடித்துள்ளார்.
இந்தப் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், நாக சைத்தன்யா திடீரென அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நட்சத்திர வாரிசு
தெலுங்கு முன்னணி ஹீரோவான நாகர்ஜுனாவின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமான நாக சைத்தன்யா, 2009ம் ஆண்டு ஜோஷ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து 'விண்ணைத்தாண்டி வருவாயா' தெலுங்கு வெர்ஷன், 'தடா', 'மனம்' என சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார். முன்னணி ஹீரோவாக வளர்ந்து வரும் அவருக்கு, தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பாலிவுட்டில் அறிமுகம்
தெலுங்குப் படங்களில் மட்டுமே நடித்து வந்த நாக சைத்தன்யா, இப்போது அமீர்கானுடன் 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்து, பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார். அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம், நாளை (ஆக.11) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்திலும் நாக சைத்தன்யா நடித்து வருகிறார்.

நன்றி சொன்ன நாக சைத்தன்யா
இந்நிலையில், சினிமாவில் நிறைய அனுபவங்களை பார்த்துவிட்டேன், ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி என நாக சைத்தன்யா கூறியுள்ளது, வைரலாகி வருகிறது. ஏன் இந்த திடீர் நன்றி என ரசிகர்கள் குழம்பியிருந்த நிலையில், சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவானதை அடுத்தே நாக சைத்தன்யா, நன்றி கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

நிறைய அனுபவங்கள் பார்த்தாச்சு
திரைத்துறையில் 13 ஆண்டுகள் நிறைவுசெய்துள்ளதைப் பற்றி பேசியுள்ள நாக சைத்தன்யா, "இந்த 13ஆண்டுகளில் நிறைய அனுபவங்களை பார்த்துவிட்டேன், அது எனக்கு அதிகமாக கற்றுக்கொடுத்துள்ளது. இதே அனுபவத்துடன் இன்னும் அடுத்தடுத்து பயணிக்க விரும்புவதாகவும், இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி" எனவும் அவர் கூறியுள்ளார்.

சமந்தா குறித்து மீண்டும் விளக்கம்
இதனிடையே, சமந்தாவுடனான விவகாரத்து குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் வெளிவருவதாக சொல்லப்படுகிறது. இதற்கும் விளக்கமளித்துள்ள நாக சைத்தன்யா, "இருவரும் ஒன்றாக இணைந்தே தங்களது பிரிவை அறிவித்தோம். சமந்தாவும் அவரது வழியில் முன்னேறி சென்றுவிட்டார். நானும் எனது பயணத்தை தொடர்கிறேன். அப்படி இருக்க ஏன் மீண்டும் மீண்டும் மக்கள் இதைப் பற்றியே பேச வேண்டும். இதுக்கு மேல் எல்லாருக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை" என, கொஞ்சம் காட்டமாகவே பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











