விஜய்யை வைத்து படம் இயக்க 2004-லேயே ராஜமௌலியிடம் கேட்டேன்! - கலைப்புலி தாணு
சென்னை: விஜய்யை வைத்து என் பேனரில் ஒரு படம் இயக்கித் தருமாறு 2004-லேயே நான் ராஜமௌலியிடம் கேட்டிருக்கிறேன், என்று புதிய தகவலை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
பாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசுகையில், "இந்தியத் திரையுலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இது.

எத்தனையோ இயக்குநர்கள் என்னுடன் பணியாற்றியபோதும் எனக்கு ராஜமெளலியுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை.
2004-ம் ஆண்டிலேயே (சச்சின் வெளியான நேரம்) நான் ராஜமெளலியுடன் பேசி 'விஜய்யை வைத்து ஒரு படத்தை நீங்கள் இயக்க வேண்டும்' என்றேன். 'இப்போது இரண்டு படங்களில் பணியாற்ற இருக்கிறேன். அப்புறம் பார்ப்போம்..' என்று அவர் சொல்ல.. அது அப்படியே தள்ளித் தள்ளிப் போய் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது.
எங்களது சத்யராஜ், புரட்சித் தலைவரின் வாரிசு. இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் வாள் எடுத்து வீசும் காட்சியை பார்த்தபோது அப்படியொரு சந்தோஷமாக இருந்தது. அவரும் ஆந்திராவில் மிகப் பெரிய புகழைப் பெற்றுவிட்டார் என்பதை நினைக்கையில் எனக்கும் பெருமையாக இருக்கிறது..
இந்தப் படம் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருப்பதால் 'பாகுபலி-1' பெற்ற வெற்றியைவிடவும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











