டிசம்பர் 31 ஆம் தேதி எடுக்கும் எந்த முடிவும் நிலைச்சதில்லை.. ரஜினி அரசியல் பற்றி கரு.பழனியப்பன் நச்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவை வரவேற்கிறேன் என்று இயக்குனர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
கடந்த 2017 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்.
அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கூறி வந்த அவர், எப்போது அரசியல் கட்சி தொடங்குவார், கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பரபரப்பு அறிக்கை
இந்நிலையில், அக்டோபர் மாதம் ரஜினி பெயரில் பரபரப்பு அறிக்கை வெளியானது. அதில், அக்டோபர் 2 ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சி பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். கொரோனா காரணமாக, யாரையும் சந்திக்க முடியவில்லை. 2011 ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தேன்.

தவிர்க்க வேண்டும்
அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தேன். அரசியலில் ஈடுபடலாமா என்று டாக்டர்களிடம் கேட்டபோது, அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றனர். எனவே சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது.

தகவல் உண்மை
இதுபற்றி ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் என் உடல்நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரை குறித்த தகவல்கள் உண்மைதான். என்று தெரிவித்தார். இந்நிலையில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சில நாட்களுக்கு முன் சந்தித்தார் ரஜினி அப்போது அவரிடம் கட்சி தொடங்க அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஜனவரியில் கட்சி
இந்நிலையில், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக தனது ட்விட்டரில் ரஜினி அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்புகளை டிசம்பர் 31 இல் வெளியிடுவேன் என கூறியுள்ளார். இதை திரைத்துறையினர் பலர் வரவேற்றுள்ளனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நிலைக்காத முடிவு
இந்நிலையில், இயக்குனர் கரு.பழனியப்பனிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்டபோது, அவர் வருவதை வரவேற்கிறேன் என்றார். அவர் மேலும் கூறும்போது, 'அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவரும் வரட்டும். என்ன முடிவு எடுகிறார் பார்க்கலாம். ஆனால், டிசம்பர் 31 ஆம் தேதி எடுக்கிற எந்த முடிவும் நிலைத்ததில்லை' என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











