'இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன்'... தர்மபிரபு பார்த்த பிறகு யோகி பாபு அறிவிப்பு!
இனி காமெடி வேடங்களில் மட்டுமே தான் நடிக்கப் போவதாக நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: இனி தான் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என்று காமெடி நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் தர்மபிரபு. நேற்று ரிலீசான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காமெடி படமான இதில் யோகி பாபு எமதர்மனாக நடித்து, தமிழக அரசியல்வாதிகளை செமையாக நையாண்டி செய்துள்ளார்.
இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து தியேட்டரில் பார்த்தார் யோகி பாபு. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இனி தன்னால் ஹீரோவாக நடிக்க முடியாது என்றார்.

படத்தை ரசிக்கிறார்கள்
இதுகுறித்து அவர் கூறியதாவது, "ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தேன். நிறைய இடங்களில் கைத்தட்டி சிரித்ததை பார்க்க முடிந்தது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இனி நோ ஹீரோ
பத்திரிகையாளர்களும் உங்களுடைய கருத்தை சொல்லுங்கள். உங்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படத்துல நடிச்சத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். உலகத்துக்கே ஹீரோவாக இருக்கும் எமதர்மன் வேடத்தில் நடித்தது மகிழ்ச்சியான விஷயம்.

காமெடி மட்டும் தான்
இனி வழக்கம் போல காமெடி மட்டும் தான் செய்வேன். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களுடன் இணைந்து காமெடியனாக நடிப்பேன். இரண்டு நண்பர்களுக்காக தான் கதையில் நாயகனாக நடித்தேன். இனி ஹீரோவாக நடிக்க போவதில்லை", என அவர் கூறினார்.

தயாரிப்பாளர்கள் வருத்தம்
யோகி பாபுவின் இந்த முடிவு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சோகத்தை தான் அளித்துள்ளது. தர்மபிரபு படத்தை போலவே, யோகி பாபு கதையில் நாயகனாக நடித்துள்ள படம் கூர்கா. அந்த படம் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











