twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலுக்கு வருமாறு ரஜினியை நான் கட்டாயப்படுத்த மாட்டேன்! - லதா ரஜினி

    By Shankar
    |

    Latha Rajini
    சென்னை: அரசியலுக்கு வருவது ரஜினியின் விருப்பத்தைப் பொருத்தது. அவரைக் கட்டாயப்படுத்த மாட்டேன். அவர் வாயாலேயே அரசியல் முடிவை சொல்ல வேண்டும், என்று ரஜினியின் மனைவி லதா கூறினார்.

    சினிமா உலகில் என்றல்ல... தமிழகத்தில் மிகவும் உதாரண தம்பதிகளாகத் திகழ்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா. இளம் தலைமுறையினருக்கு இந்த இருவரும் ஒரு ஆதர்ஸ தம்பதி என்றால் மிகையல்ல.

    ரஜினியின் உடல்நிலை மற்றும் அரசியல் குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி:

    கேள்வி: சூப்பர் ஸ்டாரின் மனைவி என்ற வகையில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதுண்டு. அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

    பதில்: இது சுலபமானது அல்ல. கண்ணாடி வீட்டுக்குள் வசிப்பது போன்றது. மற்றவர்கள்போல் சுதந்திரமாக இருக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைவதில்லை. பொதுமக்கள் பார்வையைத் தொடர்ந்து தாங்கிக் கொள்வது அத்தனை சுலபமல்ல.

    கேள்வி: உங்கள் கணவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது விளைவுகள் ஏற்பட்டுள்ளதா?

    பதில்: நிறைய... எதிர்ப்பார்க்கக் கூடிய ஒன்றும் கூட. ஆனால் ரசிகர்கள் மத்தியில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், வீட்டில் சூப்பர் ஸ்டார் என்ற உணர்வுடன் அவர் நடப்பதில்லை. ஒரு நல்ல குடும்ப தலைவராகவே நடந்து கொள்வார்.

    கேள்வி: உலகம் ரஜினியை சூப்பர் மனிதராகப் பார்க்கிறது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக அவரை பார்க்கிறீர்கள். இந்த இரண்டு பக்கங்களையும் நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

    பதில்: ரஜினியை உலகம் உயர்ந்த அந்தஸ்தில் வைத்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இதை எங்களுக்கு கிடைத்த ஆசியாக நாங்கள் உணர்கிறோம். அவருக்கு இரண்டு பக்கங்கள் கிடையாது. எப்போதும் நல்லவராக, முக்கியமானவராக, எளிமையானவராகவே இருந்து வருகிறார்.

    கேள்வி: எப்போதும் பிஸியாக இருக்கும் ரஜினியால் எப்படி இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடிந்தது?

    பதில்: குழந்தைகளுக்கு எப்போதுமே அவர் ஒரு நல்ல தந்தையாக இருந்து வந்திருக்கிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், குடும்பத்துடன், குழந்தைகளுடன் நல்ல முறையில் பொழுதை கழித்து வந்துள்ளார். விடுமுறை காலங்களில் எங்களை வெளியில் அல்லது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார்.

    கேள்வி: உங்கள் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் சினிமா துறையில் ஈடுபட்டுள்ளனரே? உங்கள் கருத்து என்ன?

    பதில்: அவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். இதைதான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. இருவரும் இயல்பாகவே மிகவும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா நல்ல எழுத்தாளர், பேச்சாளர், பாடகர் மற்றும் நடனம் ஆடக்கூடியவர். சௌந்தர்யா ஒரு நல்ல ஓவியர். சினிமாவில் அவர்களுக்குப் பிடித்த துறையை அவர்களாகவே தேர்வு செய்துள்ளனர்.

    கேள்வி: மிகப் பரபரப்பான வாழ்க்கையில் கல்வியாளர், சமூக சேவகர், இப்படி உங்களை எப்படி மாற்றிக் கொள்ள முடிந்தது?

    பதில்: இது ஒரு தனிமனித வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று கருதுகிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் அனைத்துவித சக்திகளும் உள்ளன. கடவுள் கருணையால் அவை உகந்த நேரத்தில் வெளிப்படுகின்றன.

    கேள்வி: ரஜினியின் ஆன்மீக தேடல் குறித்த உங்கள் கருத்து...

    பதில்: நானும், எனது கணவரும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இருவருமே பக்தி மார்க்கத்தில்தான் உள்ளோம். அவர் கூடுதலாக ஞானமார்க்கத்தில் இருக்கிறார்.

    கேள்வி: பின்னணி பாடுவதை ஏன் தொடரவில்லை...

    பதில்: மூன்று வருடங்களுக்கு முன்பு கூட சில ஆல்பங்களை வெளியிட்டேன். விரைவில் எதுவரையோ என்ற புதிய ஆல்பத்தை வெளியிடவிருக்கிறேன். வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் பற்றி அதில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களை நானே எழுதி பாடியுள்ளேன்.

    கேள்வி: உங்கள் கணவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

    பதில்: இதுபற்றி அவரிடம் நான் பேசவில்லை. பேசவும் முடியாது. ஆனால், அவரால் நிறைய நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை உறுதியாகக் கூறுவேன்.

    அதேநேரம் அரசியலுக்கு வருவது என்பது முழுக்க முழுக்க அவர் விருப்பம் சார்ந்தது. ஆனால், எதை அவர் செய்தாலும், அதை நல்லவிதமாக, முழு ஈடுபாட்டுடன் செய்பவர்.

    அரசியலைப் பொருத்தவரை, அது அவரிடமிருந்து வெளிப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். அவரை எந்த வகையிலும் வற்புறுத்த மாட்டேன். என்னைப் பொருத்தவரை அவரது தனிப்பட்ட மகிழ்ச்சி, உணர்வுகள் மிக முக்கியம். அவர் அடிக்கடி சொல்வதைப் போல, ஆண்டவன் கட்டளை வந்தால் நிச்சயம் அவர் வருவார்!

    கேள்வி: ரஜினி உடல்நலமின்றி இருந்தபோது உங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

    பதில்: அந்த ஆறு மாதங்களும் எனது நாட்கள் பிரார்த்தனைகளிலும் தியானத்திலுமே கழிந்தது. மக்களின் அன்பு, பெரும் குருக்களின் பிரார்த்தனைகளுமே அவருக்குப் பக்கபலமாக நின்றன. ஒரு தனி மனிதருக்காக இத்தனை பேர் நடத்திய பிரார்த்தனைதான் அவரைக் காப்பாற்றித் தந்தது. நாங்கள் வெளிநாடு சென்றது யாரையும் தவிர்க்க அல்ல, ஒரு தனிமையான சூழல் அவருக்கு வேண்டுமே என்பதற்காகத்தான்!

    கேள்வி: ரஜினி வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என சமீபத்தில் நிறைய பிரபலங்கள் பேசியிருந்தனர். அதுபற்றி உங்கள் கருத்து?

    பதில்: அவர் தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். அவர் என்ன விரும்புகிறாரே அதை இப்போதே செய்யட்டும். அதில் எப்போதும் அவருடன் இருக்க விரும்புகிறேன். நடிப்போ அரசியல் தலைமைத்துவமோ.. இரண்டிலும் அவருக்கு எப்போதும் நிர்ப்பந்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர் என்ன விரும்புகிறாரோ அதைச் சுதந்திரமாக செய்ய அவருக்கு இதுதான் சரியான தருணம். இதையே நானும் அவருக்கு சொல்ல விரும்புகிறேன்!

    English summary
    Latha Rajini told that she would never compel her husband superstar Rajinikanth to enter politics or not. "I will never force him into anything. As he says, if he gets a call, he will do it," Latha said in an interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X