இட்லி கடை , பராசக்தி பட தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு.. யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்!
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான கடைகளுக்கு மதுப்புட்டிகளை அனுப்பும் தனியார் நிறுவனங்கள், மதுபான தொழிற்சாலைகள், அதன் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், மீண்டும் பல இடங்களில் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சினிமா தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
தனுஷ் தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நானும் ரௌடிதான் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியர் தான் ஆகாஷ் பாஸ்கரன். அந்த படத்தை தொடர்ந்து விகேஷ் சிவன் இயக்கிய
'பாவக் கதைகள்' என்கிற ஆந்தாலஜி குறும்படங்களின் தொகுப்பில் 'லவ் பண்ணா உட்றனும்' என்கிற குடும்பத்தில் பணியாற்றினார். பின் காத்துவாக்குல ரெண்டு காதல், அமரன் ஆகியோர் படத்திலும் பணியாற்றி இருந்தார்.

ஆகாஷ் பாஸ்கர்: இதைத்தொடர்ந்து டான் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இவர், பெரிய பட்ஜெட்டில், முன்னணி நடிகர்களின் படத்தை தயாரித்து வருகிறார். இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக தனுஷ் இயக்கி வரும் 'இட்லி கடை' படத்தை தயாரித்து வருகிறார். இரண்டாவதாக சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பராசக்தி' படத்தை தயாரிக்கிறார். அதைத்தொடர்ந்து, அதர்வா முரளியை வைத்து 'இதயம் முரளி' என்கிற படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். இதன் மூலம் ஆகாஷ் பாஸ்கர் இயக்குநராகவும் மாறி உள்ளார். இது தவிர, சிம்புவின் 49வது திரைப்படத்தையும், அஜித்தை வைத்து தனுஷ் இயக்கும் படத்தையும் ஆகாஷ் பாஸ்கரே தயாரிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
என்ன தொடர்பு: உதவி இயக்குநராக இருந்து இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கும் ஆகாஷ், பிரபல கவின் கேர் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே. ரங்கநாதனின் மூன்றாவது மகள் தாரணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த நவம்பர் மாதம் திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் என அரசியல் ஆளுமைகளும் தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி உள்ளிட்ட திரைப்பிரலங்கள் பலரும் கலந்துகொண்டனர். தற்போது டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன சம்மந்தம் என இணையத்தில் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











