இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போக இதுதான் காரணம்?.. தயாரிப்பாளரே ஓபனா சொல்லிட்டாரே.. அஜித் படம்?
சென்னை: அஜித் குமாரின் குட் பேட் அட்லி படத்துக்கு போட்டியாக தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என கொட்டை எழுத்துக்களில் போஸ்டர் வெளியானது.
ஆனால், அஜித் படத்துக்கு போட்டியாக தனுஷின் இட்லி கடை படம் வெளியாகாது என கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித் ரசிகர்களுடன் கெத்தாக மோதிக் கொண்டிருந்த தனுஷ் ரசிகர்கள் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது என்கிற அறிவிப்பை கேட்டு தற்போது அதிர்ச்சியாகி உள்ளனர். ஆனால், இரண்டு ரசிகர்களையும் சமாளிக்கும் விதமாக அஜித்தை வைத்து தனுஷ் படம் இயக்கப் போகிறார் என்பது குறித்தும் ஆகாஷ் பாஸ்கரன் தனது பேட்டியில் பேசியுள்ளது ரசிகர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.
தள்ளிப் போகும் இட்லி கடை: அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள், இட்லி கடை படம் வந்தால் உடைந்து நொறுங்கும் என வீடியோ ட்ரோல்களை போட்டு சம்பவம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், தற்போது அதற்கு வேலை இல்லாத நிலை உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வெளியாகாது என்கிற அறிவிப்பை அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
என்ன காரணம்?: இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென தள்ளிப் போக என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில் அளித்து ஆகாஷ் பாஸ்கரன், படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய 10 சதவீதம் படப்பிடிப்பு தாமதமான காரணத்தினால் தான் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது என்றார்.
கால்ஷீட் பிரச்னை: வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய தொடர்பில் அனைத்து நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகள் இடம் பிடித்துள்ளன. தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க வேண்டிய நிலையில், அவர்களின் கால்ஷீட் பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது எனக் கூறியுள்ளார்.
அஜித் படத்தை இயக்குகிறார் தனுஷ்?: குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் குமார் சில மாதங்கள் முழுமையாக கார் பந்தயத்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் அதன் பின்னர் மட்டுமே சினிமா படங்களில் கமிட் ஆவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், அது தொடர்பான கேள்விக்கு அதெல்லாம் ஆரம்பகட்ட நிலையில் தான் உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது எனக் கூறிவிட்டார்.
தனுஷின் அடுத்த படம்: ஏகப்பட்ட இயக்குனர்கள் வரிசை கட்டி தனுஷ் படத்தை இயக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாகி வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிப்பார் என்றும் அந்த படத்தையும் டான் பிக்சர்ஸ் தான் தயாரிக்கப் போகிறது என்றும் ஆகாஷ் பாஸ்கரன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











