பாகுபலி தோற்றிருந்தா தெருவுக்குத்தான் வந்திருப்பாங்க.. மனம் திறந்த பிரபாஸ்.. ராஜமௌலி எடுத்த ரிஸ்க்?
சென்னை: இந்தியத் திரையுலகின் வரலாற்றையே மாற்றிய திரைப்படம் என்ற பெருமையை பெற்றது இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி'. இந்திய சினிமாவை உலக அரங்கில் தலைநிமிர வைத்த இந்த பிரம்மாண்ட படைப்பு, வசூல் சாதனைகளை மட்டுமல்ல, பலரது வாழ்க்கையையே மாற்றியமைத்தது. ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த மிகப்பெரிய ரிஸ்க் குறித்து நடிகர் பிரபாஸ் தற்போது மனம் திறந்து பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 'Baahubali: The Torchbearer' சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் உருவாக்கம் குறித்து பல நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். "அந்த முழு பயணமும் ஒரு போர்க்களத்தை கடந்து வந்தது போல இருந்தது. ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய அழுத்தத்துடன்தான் வேலை செய்தோம்" என்று அவர் கூறினார்.
தோற்றிருந்தா தெருவுக்குத்தான் வந்திருப்பாங்க: 'பாகுபலி' திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலேயே சில எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானதாகவும், அந்த நேரத்தில் படக்குழுவினர் மிகுந்த பதற்றத்தில் இருந்ததாகவும் பிரபாஸ் நினைவுகூர்ந்தார். மேலும், "இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர்கள் சோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்திருந்தனர். ஒருவேளை படம் தோல்வியடைந்திருந்தால், தயாரிப்பாளர்களும், இயக்குநர் ராஜமௌலியும் தெருவுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அவர்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கும்" என்று அவர் உருக்கமாக கூறினார்.

ஜப்பான் எனது இரண்டாவது வீடு: 'பாகுபலி' இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக ஜப்பான் நாட்டில் கிடைத்த வரவேற்பை நினைவுகூர்ந்த பிரபாஸ், "ஜப்பான் ரசிகர்கள் என்மீது காட்டிய அன்பை என்னால் மறக்க முடியாது. அவர்கள் அளித்த மரியாதை காரணமாக, ஜப்பான் இப்போது எனக்கு இரண்டாவது வீடு போல உணரப்படுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வெற்றிக்குப் பிறகும் மன அழுத்தம்: 'பாகுபலி' போன்ற இமாலய வெற்றிக்குப் பிறகு ஏற்பட்ட மனநிலையையும் பிரபாஸ் வெளிப்படையாக பகிர்ந்தார். "அவ்வளவு பெரிய வெற்றிக்குப் பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும், எந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய குழப்பமும், மன அழுத்தமும் இருந்தது. அந்த வெற்றியின் சுமை மிகப்பெரியது" என்று அவர் கூறியுள்ளார்.
'பாகுபலி' திரைப்படம் வெறும் வசூல் சாதனைகளை மட்டுமே படைக்கவில்லை. ராஜமௌலி, பிரபாஸ், ராணா தக்குபாடி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரின் திரைப்பயணத்தையே அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இன்று இந்திய சினிமா உலக அளவில் பேசப்படுவதற்கு அடித்தளம் அமைத்த படங்களில் ஒன்றாக 'பாகுபலி' தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications