அது மட்டும் நடந்தால்.. விஜய்யை விட அவருக்குத் தான் விசில் சத்தம் அதிகம் பறக்கும்.. அந்தணன் பளிச்!
சென்னை: விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அந்த படம் எல்சியூவா? என்றும் ஸ்பெஷல் கேமியோக்கள் விக்ரம் படத்தை போல இந்த படத்திலும் இருக்குமா? என ரசிகர்கள் லியோ பற்றி நாளுக்கு நாள் புதிய கதைகளையும் எதிர்பார்ப்புகளையும் கிளப்பி வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு பிரபல நடிகர் லியோ படத்தில் நடிக்கத் தான் காஷ்மீருக்கு பறந்து சென்றிருக்கிறார் என பேச்சுக்கள் அடிபட்டன.
இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பேட்டியில், அந்த நடிகர் படத்தில் நடித்தால் வேற மாதிரி ரெஸ்பான்ஸ் இருக்கும் என பேசி உள்ளார்.

300 கோடி வசூல்
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் என தகவல்கள் வெளியானாலும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 300 கோடி வசூல் என அறிவித்த நிலையிலும், தயாரிப்பு நிறுவனம் பொய் சொல்லுது என அஜித் ரசிகர்கள் மற்றும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் பஞ்சாயத்தைக் கூட்டினர்.

330 கோடி உருட்டு
இந்நிலையில், துணிவு திரைப்படம் 330 கோடி என அஜித் ரசிகர்கள் உருட்டி வருவதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டைப் போட்டு வருகின்றனர். துணிவு படத்தின் முதல் நாள் வசூலை கூட போனி கபூர் இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து லியோ படம் இப்பவே 1000 கோடி வசூல் செய்யும் என்றும் எதிர்பார்ப்பு உருட்டுகள் எகிறத் தொடங்கி உள்ளன.

லியோ பிசினஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் கேமியோவாக சூர்யா நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டு 400 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி அபார சாதனை படைத்த நிலையில், லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோவின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே தற்போது 400 கோடி ரூபாய் கடந்து விட்டதாகவும், கன்ஃபார்ம் படம் 1000 கோடி அள்ளும் என்றும் இப்பவே எதிர்பார்ப்புகளை கிளப்ப ஆரம்பித்து விட்டனர்.

கேமியோ இருக்குமா
கமலின் விக்ரம் படத்தில் சூர்யா அதிரடி கேமியோவாக வந்ததை போல விஜய்யின் விக்ரம் படத்தில் கேமியோ இருக்குமா என்றும் இந்த படம் எல்சியூவா என்றும் ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன. கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி என பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், கடைசியில் லெஜண்ட் சரவணன் பெயரும் சமீபத்தில் காஷ்மீரில் இருந்து அவர் வெளியிட்ட போட்டோக்கள் மூலம் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

அந்தணன் பேட்டி
இது தொடர்பாக தமிழ் பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த வலைப்பேச்சு அந்தணன் கண்டிப்பாக இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் கேமியோ இருக்காது என்றும் அவர் ஹாலிடே கொண்டாட அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை வைத்து ரசிகர்களே கிளப்பி விட்டது தான் இது எனக் கூறி உள்ளார்.

விஜய்யை விட அண்ணாச்சிக்கு
அப்படி ஒரு வேளை லியோ படத்தில் லெஜண்ட் சரவணன் கேமியோவாக வந்தால், நிச்சயம் தியேட்டரில் விஜய்யை காட்டும் போது பறந்த விசிலை விட அண்ணாச்சிக்கு அதிகமாகவே விசில் பறக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றும் அந்தனணன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவாக முடிக்கப்பட்டு வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications