'ரஜினி அழைத்தால் அவருக்காகத் தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்..' நடிகை கஸ்தூரி ரெடி!
சென்னை: ரஜினிகாந்த் தனது கட்சிக்கு அழைத்தால் அவருக்காகத் தோள்கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை கஸ்தூரி கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை இன்று உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இது பற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மாற்றம்
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. அரசியல் மாற்றம் தேவை. அது கட்டாயம் நிகழும்.

அண்ணாத்த படப்பிடிப்பு
என் உயிரே போனாலும் மக்கள்தான் முக்கியம் என களம் இறங்குகிறேன். ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் என் உயிர் மீண்டது. என் உயிரை மீட்டுக் கொடுத்த அவர்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்ததும் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு பற்றி, நடிகை கஸ்தூரியிடம் கேட்டபோது கூறியதாவது: இருபது வருடமாக, புலி வருது, புலி வருதுனு சொல்லிட்டே இருந்தாங்க. புலி பதுங்கிக்கிட்டேதான் இருந்தது. புலி பதுங்கறது பாயறதுக்காகத்தான் அப்படின்னு திட்டவட்டமா இப்போது அறிவிச்சிட்டார்.

தேனாக இனிக்கிறது
என்னை போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு, லட்சகணக்கானவர்களுக்கு இந்தச் செய்தி தேனாக இனிக்கிறது. பல கசப்பான காரணங்களுக்காக இந்த வருடம் எப்போது முடியும் என்று காத்திருந்தோம். இப்ப இந்த இனிப்பான காரணங்களுக்காக, இந்த வருடம் எப்ப வரும்னு காத்திட்டு இருக்கேன் என்கிறார் கஸ்தூரி.

எதிர்பார்ப்பு இன்றி
ரஜினிகாந்த், அவர் கட்சிக்கு அழைத்தால் செல்வீர்களா? என்று கஸ்தூரியிடம் கேட்டபோது, கண்டிப்பாக. இதில் என்ன சந்தேகம்? ரஜினிகாந்த் அழைத்தால், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, அவர் நினைத்தபடி பதவி ஆசை, பண ஆசை ஏதுமின்றி அவருக்காகத் தோள்கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











