படத்தின் அரசியல் தொந்தரவு செய்தால் நடிக்கவே முடியாது... சொல்கிறார் 'அஞ்சான்' வில்லன்
மும்பை: படத்தின் அரசியல் என்னை தொந்தரவு செய்தால், நடிக்கவே முடியாது என்று பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
தமிழில் விஷால் நடித்த சமர், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படங்களில் வில்லனாக நடித்திருந்தவர் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய்.
சமீபத்தில் இவர் நடித்திருந்த பேமிலி மேன் என்ற வெப் சீரிஸ் பலத்த வரவேற்பை பெற்றது. தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துவருகிறார்.

தேசிய விருது
ராம் கோபால் வர்மா, 1998 ஆம் ஆண்டு இந்தியில் இயக்கிய சத்யா படத்தில் நன்றாக நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் இவர். பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள இவர், காந்தி பற்றிய குறும்படம் ஒன்றில் இப்போது நடித்து முடித்துள்ளார்.

காந்திய சிந்தனைகள்
இதுபற்றி அவர் கூறும்போது, இன்றைய இளம் தலைமுறையினருக்கு காந்திய சிந்தனைகள் குறித்து குறித்தும் தெரியாமல் இருக்கிறது. அதை தெரியபடுத்தும் விதமாக உருவாக்கப் பட்டிருக்கிறது இந்த குறும்படம். நாகரிக சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அகிம்சை, பேச்சுவார்த்தை, விவாதங்கள் மட்டுமே இறுதியில் வெற்றிபெறும்.

சகிப்புத்தன்மை
மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத, சகிப்புத்தனமையற்ற மோசமான காலகட்டத்தில் இப்போது நாம் இருந்து கொண்டிருக்கிறோம். மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. அதனால்தான் அந்த படத்தில் நான் நடித்தேன் என்கிறார் மனோஜ் பாஜ்பாய்.

படத்தின் அரசியல்
அவர் மேலும் கூறும்போது, நான் நடிக்கும் படத்தின் அரசியல் என்னை தொந்தரவு செய்தால், அதில் நடிக்க மாட்டேன். ஸ்கிரிப்ட் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரி, நான் முழுமையாக உடன்படவில்லை என்றால் நடிக்கமாட்டேன். நான் நம்பாத ஒன்றை செய்கிறேன் என்று உணர்ந்தால் அதில் என்னால் நடிக்க முடியாது. அதை சினிமாவாக மட்டும்தான் பார்ப்பார்கள் என்று நினைத்தால், நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











