Ilaiyaraaja: "இளையராஜாவுக்கு பிடிக்கலைன்னா படம் சூப்பர் ஹிட்.." தக் லைஃப் மொமண்ட் கொடுத்த பாரதிராஜா
சென்னை: பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் 1985ம் ஆண்டு வெளியானது.
சிவாஜி, ராதா நடித்த இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கல்ட் கிளாஸிக் சினிமா முதல் மரியாதை.
இந்நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் போது இளையராஜா சொன்ன விமர்சனத்துக்கு தக் லைஃப் மொமண்ட் கொடுத்துள்ளார் பாரதிராஜா.
இளையராஜாவுக்கு தக் லைஃப் கொடுத்த பாரதிராஜா
தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, தற்போது நடிப்பில் பிஸியாகிவிட்டார். இவரது இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.
இவைகளில் முதல் மரியாதை திரைப்படம் தமிழ்த் திரையுலகில் கல்ட் கிளாஸிக் சினிமாவாகும். இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராதாவும், முக்கியமான கேரக்டரில் வடிவுக்கரசியும் நடித்திருந்தனர். முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
பாரதிராஜாவும் இளையராஜாவும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், திரையுலகிலும் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வந்தனர். பாரதிராஜாவின் முதல் படைப்பான 16 வயதினிலே படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவின் பல படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்தார். இந்நிலையில் முதல் மரியாதை படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வேலைகள் சென்று கொண்டிருந்ததாம்.
அப்போது முழு படத்தையும் பார்த்த இளையராஜா, “என்னய்யா படம் இது, இதெல்லாம் ஓடவே ஓடாது... இந்தப் படத்துக்கு நான் என்னத்த மியூசிக் பண்றது” என பாரதிராஜாவை சீண்டியுள்ளார். ஆனால், இளையராஜா சொன்னது எதையும் கண்டுகொள்ளாத பாரதிராஜா, பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என இளையராஜாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு, இளையராஜா சொன்னது குறித்து பாரதிராஜாவிடம் கேட்டுள்ளார். அதனைக் கேட்டு சிரித்துள்ள பாரதிராஜா, “இளையராஜா படம் நல்லா இல்லைன்னு சொல்லிட்டா அது சூப்பர் ஹிட்டாகும். 16 வயதினிலே படத்துக்கு மட்டும் தான் நல்லா இருக்குன்னு சர்டிபிகேட் கொடுத்தான் இளையராஜா. அதுவும் என்னோட முதல் படம்ன்னு சொல்லிட்டான்.”
“இப்ப முதல் மரியாதை நல்லா இல்லைன்னு சொல்லிட்டான்ல. இனி இந்தப் படம் எப்படி சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்குதுன்னு மட்டும் பாரு” என இளவரசுவிடம் பாரதிராஜா கூறியுள்ளார். அப்போது இதனை புரியாமல் முழித்த இளவரசு, முதல் மரியாதை வெளியானதும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து திகைத்துவிட்டாராம். இதனை தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இளவரசு.


Click it and Unblock the Notifications











