இளையராஜா பயோபிக்கில் இருந்து விலகினாரா அருண் மாதேஸ்வரன்?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
சென்னை: நடிகர் தனுஷ் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி பட பூஜையும் போடப்பட்டது. கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் தொடக்க விழாவில் பங்கேற்று பேசினர். ஆனால், அந்த படம் திடீரென கைவிடப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என கடந்த ஆண்டு மூன்று மொழிகளில் படு பிசியாக நடித்து வந்தார். தமிழில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை என 2 படங்களையும் இயக்கினார். மேலும், அவரை வைத்து இயக்க வரிசையில் போர் தொழில் இயக்குநர், அமரன் பட இயக்குநர், மாரி செல்வராஜ், ஆதிபுருஷ் இயக்குநர் ஓம் ராவத் என பலர் காத்திருக்கின்றனர்.

போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் அடுத்து அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் சமீபத்தில் ஹீரோயின் அப்டேட்களுடன் படப்பிடிப்பு தொடங்கிய தகவல்கள் வெளியாகின.
சிம்பு vs தனுஷ்: நடிகர் தனுஷ் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். ஏகப்பட்ட படங்களை முடித்து ரிலீஸ் செய்து தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறார். நடிகர் சிம்புவும் மாநாடு படத்திற்கு பிறகு தனது ரசிகர்களை பெருமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் பல படங்களை கமிட் செய்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்திலும் நடித்து வருகிறார். ஆனால், அவருடைய படங்கள் வெளியாக ரொம்பவே தாமதம் ஆகி வருகின்றன.
சாய் பல்லவி, ஸ்ரீலீலா: சிவகார்த்திகேயன் ஜோடியாக அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவி, பராசக்தி படத்தில் நடித்த ஸ்ரீலீலா என 2 டாப் ஹீரோயின்களுடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படம் முடியவே இன்னும் ஒரு வருஷம் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதே நேரத்தில் வரும் ஏப்ரல் முதல் இளையராஜா பயோபிக் படத்திலும் தனுஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இளையராஜா பயோபிக் டிராப் ஆகல: கேப்டன் மில்லர் படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் மாதேஸ்வரனுக்கு ஒரு வெயிட்டான வாய்ப்பை கொடுக்க நினைத்த தனுஷ் இளையராஜா பயோபிக்கை அவர் இயக்குவார் என அறிவித்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படம் ஆரம்பிக்காமல் தள்ளிப்போக படமே டிராப் என்கிற பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், ஏப்ரல் மாதம் முதல் இளையராஜா பயோபிக்கையும் தனுஷ் ஆரம்பிக்கப் போகிறார் என்கின்றனர்.
அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில்: லோகேஷ் கனகராஜை வைத்து டிசி படத்தை உருவாக்கி வரும் அருண் மாதேஸ்வரன் இளையராஜா பயோபிக்கில் இருந்து விலகிவிட்டார் என்றும் வேறு ஒரு இயக்குநர் தான் அந்த படத்தை இயக்கப் போகிறார் என வதந்திகள் பரவிய நிலையில், தனுஷின் மேனேஜர் ரியாஸ் பாஷா அந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும் அருண் மாதேஸ்வரன் தான் இளையராஜா பயோபிக்கை இயக்க காத்திருக்கிறார் என்கிற அப்டேட்டை கொடுத்துள்ளார்.
அப்துல் கலாம் பயோபிக் என்ன ஆச்சு?: நடிகர் தனுஷ் இளையராஜா பயோபிக் மட்டுமின்றி அப்துல் கலாம் பயோபிக்கிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபாஸை வைத்து ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்கத்தில் விரைவில் அந்த படமும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் தனுஷ் அடுத்த ஆண்டுக்குள் நடிப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











