கருப்பு படத்தில் இளையராஜாவை அவமதிக்கும் காட்சி.. உடனே நீக்குங்க.. நெட்டிசன்ஸ் போஸ்ட்
சென்னை: இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி மே 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் ரசிகர்களும் படக்குழுவினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இப்படி இருக்கையில் படத்தில் இசைஞானி இளையராஜாவை அவமதிக்கும் விதமாக உள்ள காட்சியை நீக்க வேண்டும் என்று இணையத்தில் இளையராஜா ரசிகர்களும் நெட்டிசன்களும் பதிவிட்டு வருகின்றனர்.
கருப்பு படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஒரு போராட்ட காட்சிக்கு, இளையராஜா இசையில் உருவான பாடலான, " போராடட ஒரு வாள் ஏந்தடா" என்ற பாடல் வரும். அந்த பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதால் இசைஞானி இளையராஜா வழக்கு தொடுத்துள்ளார் என்று அந்த காட்சி நீளும். இந்த காட்சி இளையராஜா ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காட்சியை நீக்கச் சொல்லி இளையராஜா ரசிகர்களும் நெட்டிசன்களும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இணையவாசி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், " கருப்பு திரைப்படக் குழு இளையராஜா அவர்களை கேலிச் செய்யும் வகையில் அமைத்துள்ள காட்சியை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இத்தகைய செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
இளையராஜா அவர்களின் அனுமதியின்றி அவரின் பாடல்களை பயன்படுத்தக்கூடாது என அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பும், காப்புரிமை சட்டமும் வழங்கியுள்ள சட்டப்பூர்வமான உரிமையாகும்.
ஒரு இசையமைப்பாளரின் படைப்பு என்பது அவரது அறிவுசார் சொத்து. அந்த பாடல்களை பொது நிகழ்வுகள், திரைப்படங்கள் அல்லது வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தும்போது உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்பதே காப்புரிமை சட்டத்தின் அடிப்படை. அத்தகைய சட்டப்பூர்வமான உரிமையை பாதுகாக்கும் நிலைப்பாட்டை கேலி செய்யும் போக்கில் காட்சிகளை அமைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

மேலும், கலைச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு தனி நபரை குறிவைத்து தவறான புரிதலை உருவாக்கும் வகையிலான காட்சிகளை அமைப்பது பொறுப்பற்ற அணுகுமுறையாகும். அதனை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதும் கண்டனம் தெரிவிப்பதும் சமூகத்தின் பொறுப்பான எதிர்வினையாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
இது மட்டும் இல்லாமல், கருப்பு படக்குழு பயன்படுத்திய பாடல் என்பது, அடக்குமுறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்காக ஒன்றிணைந்து போராடும் உணர்வை உற்சாகப்படுத்தும் பாடல். அப்படி இருக்கையில் அந்த பாடலையே கொச்சைப் படுத்தும் விதமாக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications