பாரதிராஜா உடலைப் பார்த்து உடைந்த இளையராஜா.. இது பேட்டி எடுக்குற வீடா? கொதித்த பின்னணி
சென்னை: தனது ஆருயிர் நண்பனும், தமிழ் சினிமாவின் இமயமுமான பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு ஓடோடி வந்த இசைஞானி இளையராஜா, செய்தியாளர்களிடம் உணர்ச்சிப் பெருக்கால் கோபப்பட்டதோடு, நண்பனுக்காகக் கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்துள்ளார்.
"இது பேட்டி எடுப்பதற்கான வீடா?: சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் வந்த இளையராஜா, தனது நண்பனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது கண்கள் கலங்கியிருந்தன. அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் பேச முயன்றபோது, நண்பனின் இழப்பைத் தாங்க முடியாமல் கடும் வேதனையில் இருந்த இளையராஜா உணர்ச்சிவசப்பட்டுக் கோபமடைந்தார்.

இளையராஜா இரங்கல்: பாரதிராஜா மறைந்து கிடக்கும் இந்தச் சூழலில், உங்களிடம் பேசுவதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. பேசுவதற்கு என்ன இருக்கிறது இப்போது? இது பேட்டி எடுப்பதற்கான வீடா? என்று மிகுந்த மனவேதனையுடன் செய்தியாளர்களிடம் கேட்டார். பின்னர் சற்று அமைதியான இளையராஜா, அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் எப்போதும் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பவன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். உங்களுடன் எனக்கு எவ்வளவு ஆழமான உறவு இருக்கிறதோ, அதே போன்ற உறவுதான் எனக்கு பாரதிராஜாவிடமும் இருக்கிறது. இரண்டும் வேறு வேறு இல்லை, இருவரும் ஒன்றுதான். இந்த நாட்டையும், நாட்டு மக்களையும், சக கலைஞர்களையும் நேசிப்பதுதான் என்னுடைய பிறப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

தேனி மண்ணின் மைந்தர்கள்: தேனி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் நாடகங்கள் போட்டுக் கொண்டிருந்த காலத்திலிருந்தே இருவரும் இணைபிரியா நண்பர்கள். 'பாவலர் பிரதர்ஸ்' என்ற குழுவில் இளையராஜா இசையமைத்துப் பாடிக் கொண்டிருந்தபோது, அவருடன் நிழலாய் பயணித்தவர் பாரதிராஜா. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை எனப் பல காவியப் படங்களுக்கு இளையராஜாவின் இசைதான் ஆன்மாவாக அமைந்தது. பாரதிராஜாவின் கேமராவும், இளையராஜாவின் இசையும் இணைந்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றின.


Click it and Unblock the Notifications