தேவா பற்றி எங்கிட்ட கேட்காத.. நான் இன்கிரெடிபிள் இளையராஜா.. விமான நிலையத்தில் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: இசைஞானி இளையராஜா லண்டனில் தனது சிம்பொனி இசையை வெளியிடுவதற்காக இன்று காலை லண்டன் புறப்பட்டுச் செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய இளையராஜா இன்கிரெடிபிள் இந்தியா போல நான் இன்கிரெடிபிள் இளையராஜா என தனது சிம்பொனி குறித்தும் தான் இந்தியாவின் பெருமை என்றும் பேசினார்.
35 நாட்களில் புதிய சிம்பொனியை உருவாக்கினேன் என கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து இளையராஜா பதிவிட்டது இசை ரசிகர்களையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 81 வயதிலும் உலகம் முழுவதும் சென்று தனது இசை பயணத்தை இளையராஜா நடத்தி வருவதை பார்த்து பலரும் வாய் பிளந்து வருகின்றனர்.

தான் உருவாக்கிய சிம்பொனியை லண்டனில் நடைபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் அறிமுகம் செய்வதற்காக இளையராஜா இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிவகார்த்திகேயன் முதல் அண்ணாமலை வரை: இளையராஜா தனது அடுத்த இலக்கை இந்த வயதிலும் அடைவதற்காகவும் இசைத்துறையில் புதிய சாதனைகளை படைத்து வருவதை பார்த்து வியந்த பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இளையராஜாவின் வீட்டுக்கே சென்று அவருக்கு இசைக்கருவி ஒன்றை பரிசாக வழங்கி ஆசைப்பெற்று வந்தார். நேற்று பாஜக தலைவர் அண்ணாமலையும் இளையராஜாவை சந்தித்து அவரது பாதங்களை தொட்டு ஆசி பெற்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இன்கிரெடிபிள் இளையராஜா: இந்திய இசைத்துறையில் இளையராஜா செய்த அளவுக்கு சாதனைகளை வேறு எந்தவொரு இசையமைப்பாளர்களும் செய்திருப்பார்களா என்றால் அது பில்லியன் டாலர் கேள்வி தான். அன்னக்கிளியில் ஆரம்பித்த பயணம் இன்று லண்டனில் சிம்பொனியை அறிமுகம் செய்து வைக்கும் அளவுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது இந்த இசைக்கடல். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா "இந்தியாவின் பெருமை நான், எப்படி இன்கிரெடிபிள் இந்தியா என்று சொல்கிறார்களோ அதே போல இன்கிரெடிபிள் இளையராஜா நான்" என செய்தியார்கள் மத்தியில் பேசினார்.
தேவா பற்றிய கேள்வியால் டென்ஷன்: காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் தேவா தனது பாடல்களை மற்றவர்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறாரே என்கிற கேள்வியை செய்தியாளர் ஒருவர் இளையராஜாவிடம் எழுப்ப, இப்போ இந்த கேள்வி தேவையா? அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க, இங்க நான் பேசணுமா? இல்லை நீங்க பேசணுமான்னு முடிவு பண்ணிக்கோங்க என டென்ஷன் ஆகிவிட்டார். நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான் என்றும் மக்களுக்காக என்றுமே எனது இசை பயணம் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் என்றும் கூறிச்சென்றார்.


Click it and Unblock the Notifications











