உலகில் 4 கோடி இளைஞர்களைச் சந்தித்த ஒரே தலைவர் அப்துல் கலாம்தான்! - இளையராஜா
ஈரோடு: உலகிலேயே 4 கோடி இளைஞர்களைச் சந்தித்த ஒரே தலைவர் அப்துல் கலாம்தான் என்றார் இளையராஜா.
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளையின் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்த அறக்கட்டளை சார்பில் கவிஞர் மு.மேத்தாவுக்கு எஸ்கேஎம் இலக்கிய விருதை வழங்கி இளையராஜா பேசியதாவது:
பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதைத் தவித்து வருகிறேன். கவிஞர் மேத்தாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு கூட வர இயலாது என முதலில் தெரிவித்தேன். ஆனால், இந்த விருதை நான் வழங்கினால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என மேத்தா பிடிவாதமாகவும், உறுதியாகவும் கூறினார். இதனால், வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.
3 தெலுங்குப் படங்களுக்குப் பின்னணி இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த நான் அந்த வேலையை நேற்றே முடித்துவிட்டு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் ஒவ்வொரு விதமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை சாதாரண வாழ்க்கை முறையில் இருந்து ஒதுங்கி இருக்கும் வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வருகிறேன்.
எனது பேச்சும் பாட்டும் ஒன்றுதான். ஒரு பாட்டை, மனதால் நினைத்தபடி கேட்டால் மனம் அமைதியாகி விடும். இசை, செவி வழியாக உள்ளத்தில் ஊடுருவும்போது உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மனதில் அமைதி ஏற்படும். இசையும், அமைதியும் இறைவன்தான்.
எனக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகம். எந்தப் புத்தகத்தையும் அதிகமாகப் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. அதேபோல் எந்த திரைப்படத்தையும், ஏன் நானே இசை அமைத்த படத்தையும் பார்ப்பதில்லை. காரணம், அந்தப் புத்தகத்தை படிக்கும்போதும், திரைப்படத்தை பார்க்கும்போதும், அதில் இருக்கும் தவறுகள் தான் எனக்கு முதலில் தெரியும். அதுகுறித்து கருத்து கூறினால் பிறர் மனம் புண்படும்.
இலங்கைத் தமிழர்கள் போர்க்களத்தில் பட்ட துயரங்களை வெளிப்படுத்தும் விதமாக திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதில், நான் இசை அமைத்திருக்கிறேன். அனைத்துப் பாடல்களையும் மேத்தா எழுதியுள்ளார்.
சினிமாவில் எந்த நடிகருக்கும், அரசியலில் எந்த அரசியல்வாதிக்கும் கிடைக்காத மரியாதை அப்துல்கலாமுக்கு கிடைத்துள்ளது.
அவரது மறைவுக்கு மறுநாள் சென்னையில் இருந்து காரில் நான் பயணித்தபோது, எந்த சாலையிலும் மரங்கள் வெட்டப்படவில்லை. எந்த வாகனமும் உடைக்கப்படவில்லை. அவரவர் தங்களது சொந்த செலவில் பேனர்கள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். உலகத்தில் 4 கோடி மாணவர்களைச் சந்தித்த ஒரே தலைவர் அப்துல் கலாம்தான்," என்றார்.


Click it and Unblock the Notifications











