Ilaiyaraaja: "அப்பா அப்படி பண்ணும் போது மனசு கஷ்டமாகிடும்..” இளையராஜா குறித்து கார்த்திக் ராஜா ஓபன்!
சென்னை: கோலிவுட் மட்டும் இல்லாமல் இந்தியளவில் முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுகிறார் இளையாராஜா. 80 வயதை கடந்த பின்னரும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா, தற்போது விடுதலை 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இளையராஜா குறித்து அவரது மகன் கார்த்திக் ராஜா மனம் திறந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
இளையராஜா பற்றி கார்த்திக் ராஜா
அன்னக்கிளி மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமான இளையராஜா, இதுவரை ஆயிரம் படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துவிட்டார். ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இளையராஜாவுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இளையராஜா மட்டும் இல்லாமல் அவரது மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா இருவருமே இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மறைந்த இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசைத் துறையில் பாடகியாக கொடிக் கட்டிப் பறந்தார். இவர்களில் யுவன் ஷங்கர் ராஜா மட்டுமே முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். கார்த்திக் ராஜா அவ்வப்போது படங்களுக்கு இசையமைத்தாலும் மற்ற நேரங்களில் அப்பாவுக்கு உதவியாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்பா இளையராஜா குறித்து கார்த்திக் ராஜா மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தான் அம்மா பிள்ளை தான் என்றாலும் அப்பா மீது ரொம்பவே மரியாதை உண்டு. அப்பா வீட்டிலேயே எங்களுடன் பேசுவது ரொம்பவே அரிதான விஷயம் தான். மற்ற வீடுகளைப் போல அப்பா - மகன் பாசமெல்லாம் இங்கே அதிகம் கிடையாது. அப்பா எங்களுடன் பேசுவதையே நாங்கள் பெருமையாக நினைப்பது உண்டு.
அதேபோல் நாங்கள் இசையமைப்பதை அப்பாவிடம் போட்டுக் காட்ட மாட்டோம். அவர் எதாவது நல்லா இல்லையென்றால் 'ச்சீ த்தூ'..' என துப்பிவிடுவார். அப்போது தான் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அப்பா ஒரு பெரிய லெஜண்டாக இருந்தும் எங்களுக்கெல்லாம் வழி காட்டாமல் இப்படி இருப்பதை நினைத்து மனது இறுக்கமாக ஆகிவிடும் என ரொம்பவே உருக்கமாக பேசியுள்ளார் கார்த்திக் ராஜா.
முன்னதாக யுவன் 25 நிகழ்ச்சியில் இளையராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது பேசிய இளையராஜா, "எங்களை நாங்களே நாலு பேரும் ஒரே மேடையில் பார்க்கறது எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு!" எனக் கூறியிருந்தார். அந்தளவுக்கு இசை என வந்துவிட்டால் தனது குடும்பத்தை மறந்து வேலை செய்வது இளையராஜாவின் வழக்கம். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் தனது மகள் பவதாரிணி உயிரிழந்த போது உடைந்து போயிருந்தார் இளையராஜா. அப்போது வெளியான அவரது புகைப்படங்கள் ரசிகர்களை கண் கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











