Ilaiyaraaja: எனக்கு தலைக்கணம் அதிகம்னா அப்போ அவங்களுக்கு..? சூடான இளையராஜா... வெடித்தது சர்ச்சை!
சென்னை: இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா.
1500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் பிஸியாகவே காணப்படுகிறார்.
சமீபத்தில் அமேசானில் வெளியான மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி தொடரிலும் இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்தத் தொடரில் இசையமைத்தது குறித்து பேசியுள்ள இளையராஜா, அவர் மீதான சர்ச்சைகளுக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இளையராஜாவுக்கு தலைக்கணம் அதிகம்னு சொல்றாங்க
அன்னக்கிளி படத்தில் தொடங்கிய இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம், தற்போது மாடர்ன் லவ் சென்னை சீரிஸ் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மாடர்ன் லவ் சென்னை சீரிஸில் இளையராஜாவின் இசை ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக மார்ச் இறுதியில் விடுதலை படத்திலும் இளையராஜாவின் இசை பாராட்டைப் பெற்றது.
மாடர்ன் லவ் சென்னை சீரிஸில், பாரதிராஜா, தியாகராஜா குமாரராஜா ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. இசையில் எப்போதும் குறை வைக்காத இளையராஜா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்படுகிறார். சமீபத்தில் கூட மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட இளையராஜாவின் வீடியோ கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அதேபோல், இளையராஜா - ஜேம்ஸ் வசந்தன் இருவருக்கும் நடந்த மோதலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அப்போது இளையராஜாவுக்கு தலைக்கணம் அதிகம் என ஜேம்ஸ் வசந்தன் கூறியிருந்தார். அவர் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்த பலரும் இளையராஜா தலைக்கணம் குறித்து விமர்சித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அதிகுறித்து இளையராஜாவே விளக்கம் கொடுத்துள்ளார்.
முதலில் மாடர்ன் லவ் சீரிஸ்க்கு இசையமைத்தது குறித்து பதிலளித்த இளையராஜா, லவ் என்றாலே மாடர்ன் தான், நான் குற்றம் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம், என்னுடைய பார்வை உண்மையை மட்டுமே பார்க்கும் என்றுள்ளார். மேலும், இந்த மாதிரி படங்களில் வேலை பார்க்கும் போது, நான் என் இசையுடன் மட்டும் தான் போட்டிப் போடுவேன், மற்றதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், மாடர்ன் லவ் சென்னை உட்பட என்ன டைட்டில் வைத்தாலும் எனக்கு ஓகே தான். அதற்காக நான் தூக்கி எறிஞ்சி பேசுவதாக நினைக்க வேண்டாம். என்னுடைய இடத்தில் இருந்து தான் பேச முடியும். இதை நீங்கள் தலைக்கணம் என சொன்னாலும் சரி. எல்லாரும் எனக்கு தலைக்கணம் அதிகம் என சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்களுக்கு எவ்வளவு தலைக்கணம் இருக்கும். நான் இசை பாதையில் போய்க்கிட்டு இருக்கும்போது எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை என ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள இளையராஜா, இசைக்காக எப்பவுமே முன்கூட்டியே திட்டமிடுவது கிடையாது. காட்சியமைப்பு பற்றி இயக்குநர் சொன்னவுடன் நான் என்ன நினைக்கிறனோ அதுவே ட்யூனாக மாறும், அது அவர்களுக்கும் பிடிக்கிறது. 70களின் காலக்கட்டத்தில் ஒரு சிச்சுவேஷன் சொன்னால் நான் ட்யூன் கொடுப்பேன். அதற்கு மாற்றாக மேலும் 6 ட்யூன்களும் கொடுப்பேன். ஒரு நாளில் 3 படங்கள் வரை முடித்த எனக்கு தியாகராஜா குமாரராஜா எல்லாம் 3வது தலைமுறை தான் என இளையராஜா கூறியுள்ளார்.
தன்னைப் பார்த்து தலைக்கணம் எனக் கூறிவர்களுக்கு எவ்வளவு தலைக்கணம் இருக்கும் என இளையராஜா பேசியுள்ளது வைரலாகியுள்ளது. அவரின் இந்த கருத்து பற்றி வழக்கம் போல இளையராஜாவின் ரசிகர்கள் ஒருபக்கமும் அவரது ஹேட்டர்ஸ் மறுபக்கம் என சமூக வலைத்தளங்களில் விவாதம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











