twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'என்னடாது உல்கே உல்கே...'ன்னு எம்எஸ்வியை கன்னத்தில் அறைந்தார் கவிஞர்!- இளையராஜா சொன்ன தகவல்

    By Shankar
    |

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதன் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் விதமாக இசைஞானி இளையராஜா 'என்னுள்ளில் எம்.எஸ்.வி. 'என்கிற பிரமாண்ட லைவ் இசை நிகழ்ச்சியை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடத்தினார்.

    நிகழ்ச்சியின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக முதலில் ஒலித்தது 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல். இளையராஜா பேசத் தொடங்கியதும் திருவாசகப் பாடலை பாடினார். இசைநிகழ்ச்சி தொடங்கியதும் இளையராஜா முதலில் எம்.எஸ்.வி பற்றி சற்று ஆதங்கத்துடன்தான் ஆரம்பித்தார்.

    எம்எஸ்வி உலகமகா மேதை

    எம்எஸ்வி உலகமகா மேதை

    "எம்.எஸ்.வி அண்ணா உலகமகா இசையமைப்பாளர்தான் ,உலகப்புகழ் பெற்ற எந்த இசையமைப்பாளருக்கும் அவர் குறைந்தவரல்ல. தமிழ்நாட்டிலே பிறந்ததால் எம்.எஸ்.வி அண்ணா உலக மகா மேதையில் சேரமாட்டாரா? பாரதி சொன்ன மாதிரி நெருப்பில் சிறியது என்ன பெரியது என்ன? தழலில் சிறிது என்ன பெரிது என்ன? தமிழ்நாட்டு நெருப்பு உலகை எரிக்காதா? அக்கினிக் குஞ்சு அளவில் சிறிதானாலும் எரிக்கும்.

    என்னைப் பாதித்தவர்

    என்னைப் பாதித்தவர்

    அவர் என் இளமைப் பருவத்தை ஆட்கொண்டதை என்னுள் புகுந்து நிறைந்து என்னைப் பாதித்ததையே இங்கே. பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

    எம்.எஸ்.வி அவர்கள், இசையமைப்பாளர் சிஆர் சுப்பராமனின் சீடர்..எம்.எஸ்.வி,தன் குருவை உயிரைப் போல் மதித்தவர். 'தேவதாஸ்' படத்திற்கு இசையமைத்த போது சுப்பராமன் மறைந்து விட்டார். இரண்டு பாடல்கள் முடியவில்லை. எம்.எஸ்.வி தான் பாடல்கள் இசையமைத்து பின்னணி இசையமைத்தும் முடித்துக் கொடுத்தார்.

    எம்எஸ்வியைச் சந்திக்கும் வரை

    எம்எஸ்வியைச் சந்திக்கும் வரை

    எனக்கு இசை கற்றுக் கொடுத்த மாஸ்டர் தன்ராஜ் சினிமா இசையமைப்பாளர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்வார். சினிமா இசையமைப்பாளர்களுக்கு இசைபற்றிய நுணுக்கங்கள், தொழில்நுட்பங்கள் தெரியாது என்பார். நானும் அப்படிப்பட்ட கருத்தையே கொண்டிருந்தேன் எம்.எஸ்.வியை சந்திக்கும் வரை. அவர் இசையமைத்த வேகம்,அவரது ஞானம், துல்லியம் இவற்றை நேரில் பார்த்தபின் என் அபிப்ராயம் எல்லாம் உடைந்து நொறுங்கியது.

    பிரமிப்பு

    பிரமிப்பு

    ஒரு முறை 'சண்டிராணி' படப் பாடலை யாரோ இசையமைத்ததாக நினைத்து அவரிடம் பேசினேன். அவர் அது தான்தான் என்றதும் எனக்கு அதிர்ச்சி. ஏன் நம்பமாட்டாயா என்றார். அன்று அவர்மீது ஏற்பட்ட பிரமிப்பு பிறகு கடைசி வரை குறையவே இல்லை.

    கீர்த்தனைக்கு சமம்

    கீர்த்தனைக்கு சமம்

    அவரது பாடல்களில் எல்லாமும் இருக்கும். ஒரு பாடலில் 'மறைந்தது சிலகாலம், தெளிவும் அறியாது ,முடிவும் புரியாது மயங்குது எதிர்காலம் 'என்று கவலைப்பட வைத்தார் அடுத்த பாடலில் 'மயக்கமா கலக்கமா' என நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்தார். அவரது 'தங்கரதம் வந்தது வீதியிலே' பாடலைக் கீர்த்தனைக்கு ஒப்பானது என்றார் பால முரளி கிருஷ்ணா.

    விஸ்வநாதன் வேலை வேணும்

    விஸ்வநாதன் வேலை வேணும்

    நானும் அண்ணன் பாவலரும் சினிமாவுக்கு வரும்முன் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடியபோது பாடியவை எல்லாமே அண்ணனின் மெட்டுகள்தான் 'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலை 'சுப்ரமணியம் சோறு வேணும்' என்று சி. சுப்ரமணியத்தைப் பார்த்து கேட்டோம் இப்படிப் பல பாடல்கள் கஜல் பாடலாக முதலில்அண்ணன் எம்.எஸ்.வி தந்தது 'நிலவே என்னிடம் நெருங்காதே' பாடல்தான்.

    மொசார்ட்டின் இசை

    மொசார்ட்டின் இசை

    சங்கீதத்துக்கு நான் பொறுப்பு சாகித்யத்துக்கு நீங்கள் பொறுப்பு என்று கவிஞர்களிடம் கூறுபவர். 200 ஆண்டுகளுக்கு முன்பு மொசார்ட் அமைத்த இசை இவரிடம் இருந்தது . மொசார்ட் இசையை இவர் கேட்டிருக்க கேட்க வாய்ப்பே இல்லாத சூழலில், மொசார்ட் அமைத்த உலகத்தர இசை இவரிடம் இருந்திருக்கிறது.

    என்னடாது உல்கே மாயம்

    என்னடாது உல்கே மாயம்

    அப்படிப்பட்ட எம்.எஸ்.வியை உடுமலை நாராயணகவி ஒரு முறை அறைந்து விட்டார். 'உலகே மாயம்' பாடலை கண்டசாலா 'உல்கே மாயம்' என பாடிவைத்திருந்தார். அடப்பாவி, என்னடாது உல்கே மாயம்... என் பாட்டை இப்படி கெடுத்து வைத்திருக்கிறாயே என இன்னொரு முறையும் அறைந்தாராம். பிறகு மீண்டும் கண்டசாலாவை வரவழைத்து சரியாகப் பாட வைத்திருக்கிறார்.

    எம்எஸ்விக்குப் பிடித்த பூங்கதவே...

    எம்எஸ்விக்குப் பிடித்த பூங்கதவே...

    அவர் பிடித்து விட்டது என்றால் மனதை திறந்து பாராட்டுவார். குழந்தை மனசு அவருக்கு .எம்.எஸ்.விஅண்ணா என்னை முதலில் பாராட்டியது 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலுக்குத்தான். அப்போதெல்லாம் என் பட பாடல் பதிவும் அவர் பட பாடல் பதிவும் அடுத்தடுத்து கூட இருக்கும். அவர் வந்தால் எனக்கு பதற்றமாகிவிடும் 'தண்ணி கருத்திருச்சு 'பாடலை ஜிகே வெங்கடேஷ் மாற்றி மாற்றிப் பாடினார். 62 டேக் எடுத்தேன். எம்.எஸ்.வி என்னைப் பாடிக் காட்டச் சொன்னார். எனக்கு மேலும் பதற்றம். ஏதோ மிஸ் ஆகி பல டேக் எடுத்தேன்.

    சூப்பர் ஸ்டார் படங்களுக்கும் போட முடியாத பாட்டு

    சூப்பர் ஸ்டார் படங்களுக்கும் போட முடியாத பாட்டு

    'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' என்ன ஓர் அற்புதமான பாடல் அப்படி எல்லாம் இன்று போடமுடியுமா? இப்போது போட்டால் எழுந்து போய் விடுவார்கள். சூப்பர் ஸ்டார் நடித்தாலும் இப்போது எழுந்து போய் விடுவார்கள். ஏனென்றால் அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வேறாக இருக்கிறது,. 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாட்டு போல இப்போது இல்லை என்பது திட்டவட்ட முடிவு. இனியும் இருக்கப் போவதில்லை .இப்போதெல்லாம் சிப்ஸ், பாப்கார்ன்கள் வந்துவிட்டன.

    மூளையைப் பயன்படுத்துங்கள்...

    மூளையைப் பயன்படுத்துங்கள்...

    இப்போதுள்ளவர்களுக்குச் சொல்கிறேன், இன்று இசை கேவலமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. கையில் சாம்பிள் வைத்துக் கொண்டு இசையமைத்து வருகிறார்கள். சாம்பிளை எல்லாம் தூக்கி போடுங்கள் கையிலுள்ள கம்யூட்டரை தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள். கம்யூட்டரைப் பயன்படுத்தாதீர்கள்.மூளையைப் பயன்படுத்துங்கள். கம்யூட்டர் சிப்பை விட்டுவிட்டு மூளையிலுள்ள சிப்பை பயன்படுத்துங்கள்.

    ஸ்ரீதர் படத்தை மறுத்தேன்

    ஸ்ரீதர் படத்தை மறுத்தேன்

    எம்.எஸ்.வி அண்ணாவை விட்டுவிட்டு எனக்கு ஸ்ரீதர் பட வாய்ப்பு வந்த போது நான் அதை மறுத்தேன்.பாரதிராஜா கூட பெரிய வாய்ப்பு ஏன் மறுக்கிறாய் என்றார். 58 படங்கள் இசையமைத்த எம்.எஸ்.வி அண்ணாவையே அவர் தூக்கிப் போட்டு விட்டார். அவருக்கு நான் இசையமைக்க மாட்டேன் என்று நான் மறுத்தேன்.

    யாரையும் கூப்பிடாதது ஏன்?

    யாரையும் கூப்பிடாதது ஏன்?

    அப்படிப்பட்ட எம்.எஸ்.வி. என்னைப் பாதித்த உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினேன். அந்த உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடாது என்றுதான், எஸ்பிபி உள்ளிட்ட யாரையும் நான் கூப்பிடவில்லை. அவருக்கு மறைவு என்பதே இல்லை அவர் என்றும் நம்முடன் இருப்பார். இன்றும் எம்.எஸ்.வி அண்ணா நம்முடன் இருக்கிறார்,'' என்று நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.

    மயங்க வைத்த பாட்டு

    மயங்க வைத்த பாட்டு

    நிகழ்ச்சியின் கடைசியாக 'பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ? சாட்சி சொல்லும் சந்திரனே நீபோய் தூதுசொல்ல மாட்டாயோ?' என்ற பாடலை ராஜாவின் குழு பாடியபோது மொத்த அரங்கமும் பித்துப் பிடித்த நிலையில் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

    அந்தப் பாடலுக்கு ராஜாவின் குழுவினர் இசையமைத்த விதமும், பாடகர்கள் பாடிய விதமும் மொத்த கூட்டத்தையும் பரவச நிலைக்குத் தள்ளின. அந்தப் பாடல் முடியும் வரை, தங்கள் கைத்தட்டல்களையும் இசையாக்கி மகிழ்ந்தனர்.

    இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கக் கூடாதா என ஏங்கும் வகையில் அமைந்தது அந்தப் பாடல். அதுதான் எம்எஸ்வி என்ற மகானின் இசையின் சிறப்பு!

    English summary
    Ilaiyaraaja's Ennullil MSV music concert held at Kamarajar Arangam on Monday was a complete musical treat to music lovers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X