ஒரே ஒரு போஸ்ட்.. பாவம் இளையராஜா இப்படி மாட்டிக்கிட்டாரேப்பா.. என்ன பஞ்சாயத்து?
சென்னை: எப்போதுதான் மே 4 வரும், எப்போதுதான் இந்த தேர்தல் பரபரப்பு முடிந்து மக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்ற எண்ணத்தில் தான் மக்கள் நாள்தோறும் நாட்களை கடந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு புறம் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சியினரும், விஜய் தான் முதலமைச்சர் ஆவார் என்று அவரது கட்சியினரும் இணையத்தில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் வாக்கு எண்ணிக்கையே முடியவில்லை இப்படி இருக்கையில் விஜய்க்கு இவ்வளவு வாக்கு சதவீதம் கிடைத்துவிட்டது, இந்த மக்கள் எல்லாம் வாக்களித்துள்ளனர் என்று வெளியான தகவல்களை மையமாக வைத்து இணையத்தில் அட்டாக் மோடுக்குச் சென்று விடுகிறார்கள். இப்படி இருக்கையில் திமுகவுக்கு ஆதரவான இணையவாசிகள், திமுக கொண்டு வந்த நலத்திட்ட உதவிகள் மூலம் பலன் பெற்று வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொண்ட மக்கள் கொஞ்சம் கூட நன்றி உணர்வு இல்லாமல் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்று காட்டமாக விமர்சித்தர். சிலர் எல்லை மீறி மோசமாக எல்லாம் விமர்சித்தனர்.

இப்படி இருக்கையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனை மேடையில் வைத்துக் கொண்டு, இசைஞானி இளையராஜாவோ, " நாம் யாரால் எல்லாம் ஆளபடப்போகிறோம் என்பது நமது தலையில் விதியாக எழுதி இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த சம்பவம் நடைபெறும் போது, மேடைக்கு கீழ் நடிகர் விஜய் அமர்ந்திருந்தார். அப்போது அவர் கட்சி தொடங்கவில்லை.
பாடலைப் பகிர்ந்த இளையராஜா: இப்படி இருக்கையில், தற்போது இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடே இருக்கிறது என்ற பாடலைப் பகிர்ந்துள்ளார். இது விஜய்க்கு ஆதரவான பதிவாக இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் இணையத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து ஃபயர் விடத் தொடங்கிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கிறோம் என்று திமுகவைச் சேர்ந்த இணையவாசிகளும் இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டம் கொடுத்தவர் கலைஞர் தான் என்று பதிவிட்டு வந்தனர்.

கலைஞர் சொன்னது: இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டம் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதிதான். மேலும் இருவருக்கும் ஜூன் 3ஆம் தேதி தான் பிறந்த நாள், ஆனால் அன்றைய தினத்தில் அனைவரும் கலைஞருக்குத்தான் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று தனது பிறந்த நாளை ஜூன் 2ஆம் தேதி கொண்டாடி வருகிறார் இளையராஜா. இப்படி இருக்கையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒருமுறை, " நம்மால் உதவிகள் பெற்றவர்கள் நமக்கு நன்றியுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது" என்று தெரிவித்ததைக் குறிப்பிட்டு, இசைஞானி இளையராஜா, கலையரசி ராதிகா மற்றும் விஜய் என மூன்று பேரின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவுக்கு பலரும் பதில் அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications