Ilaiyaraaja: AR ரஹ்மான் இசையில் பாடியதால் இளையராஜா வாய்ப்புத் தரவில்லை... கண்கலங்கிய மின்மினி
சென்னை: மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரஹ்மான்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
முக்கியமாக சின்ன சின்ன ஆசை பாடலும், அதனை பாடிய மின்மினியும் ரசிகர்களிடம் பிரபலமாகினர்.
இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியதால் இளையராஜா தனக்கு சான்ஸ் தரவில்லை என மின்மினி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இளையராஜா வாய்ப்புத் தரவில்லை: ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இன்னும் ராஜாங்கம் நடத்தி வருகிறார். முதல் படமான ரோஜாவுக்காக தேசிய விருதை வென்றவர், பின்னாளில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருதுகளையும் வென்று வந்தார். ரோஜா படத்தில் இடம்பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடல் தான் அவரின் முதல் அடையாளம் எனலாம்.
இந்தப் பாடலை பாடகி மின்மினி பாடியிருந்தார். 1989ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஸ்வாகதம் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் மின்மினி. அதனைத் தொடர்ந்து தமிழில் இளையராஜா இசையில் 'மீரா' படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். ஆனாலும், இவருக்கு மிகப் பெரிய அளவில் அடையாளம் கொடுத்தது சின்ன சின்ன ஆசை பாடல் தான். அதன்பின்னர் ஏஆர் ரஹ்மான் இசையில் சில பாடல்கள் பாடினார்.
இந்நிலையில், மலையாள டிவி ஷோவில் கலந்துகொண்ட மின்மினி, இளையராஜா குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அதாவது சின்ன சின்ன ஆசை பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனதால், இளையராஜா அவருக்கு வாய்ப்புத் தரவில்லை எனக் கூறியுள்ளார். வேறு இடத்தில் பாடத் தொடங்கியதால் இனி அங்கேயே செல் என இளையராஜா அவரிடம் காட்டமாக கூறியதாக மின்மினி தெரிவித்துள்ளார். வேறு இடம் என்பது ஏஆர் ரஹ்மானை குறிப்பிட்டு தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பாடல் ரெக்கார்டிங் சென்றுகொண்டிருந்த போதுதான் இளையராஜா அவரை இப்படி திட்டினாராம். அப்போது தன்னுடன் பாடிக்கொண்டிருந்த மனோ தான் தன்னை சமாதானப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்திற்குப் பிறகு இளையராஜா அவரை அழைக்கவே இல்லை எனவும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஒருகட்டத்திற்குப் பின்னர் சினிமாவில் பாட வாய்ப்புக் கிடைக்காத மின்மினி இறுதியாக மலையாளத்தில் 2015ம் ஆண்டு வெளியான மிலி படத்தில் பாடியிருந்தார்.
இந்நிலையில், இளையராஜா குறித்து மின்மினி பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியதால் தான் இளையராஜா அவ்வாறாக நடந்துகொண்டார் என மின்மினி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஆர் ரஹ்மானும் அப்போது தான் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











