இடிந்து போன இளையராஜா.. பிடித்தமான பச்சை சேலையில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம்!
சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். செல்ல மகளின் மறைவால் மனம் உடைந்து போய் நின்ற இளையராஜாவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். பவதாரிணியின் உடல் தேனியில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி, வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது உடல், இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து, விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, சிவகுமார், ராமராஜன், விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், ஸ்ரீகாந்த், உதயா, விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல, வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி ஆகியோர் திநகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
பவதாரிணியின் உடல்: இதை தொடர்ந்து இறுதிச் சடங்கிற்காக ஆம்புலன்ஸ் மூலம் பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணைபுரத்திற்கு வந்த பவதாரிணி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி, உறவினர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் பவதாரிணி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதே போல பாரதி ராஜா பவதாரிணியின் உடலைப் பார்த்து மகளே என கதறி அழுதார். இறுதிச்சடங்கில் அமீர், டிரம்ஸ் சிவமணி, பிரேம்ஜி, ஜான் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆறுதுல் கூறும் ரசிகர்கள்: பவதாரிணியின் உடல் அருகில் இளையராஜா அமர்ந்து கொண்டு பவதாரிணி முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். கரையாத கல்நெஞ்சமும் கரைந்துபோகும் அளவிற்கு சோகமே உருவான இளையராஜாவின் முகத்தை பார்க்கமுடியாமல் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதையடுத்து நான்கு மணி அளவில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரது உடலுக்கு திருவாசகம் பாடப்பட்டது.
உடல் நல்லடக்கம்: இதையடுத்து பண்ணை இல்லத்தில் இருந்து, பவதாரிணிக்கு பிடித்தமான பச்சை நிற பட்டு சேலை போர்த்தப்பட்டு, பண்ணை இல்லத்தில் இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் உடலுக்கு அருகில் பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கண் கலங்கி நின்ற இளையராஜாவிற்கு அங்கு இருந்தவர்கள் கனத்த இதயத்துடன் ஆறுதல் கூறினார்கள்.


Click it and Unblock the Notifications











