‘இளையநிலா பொழிகிறதே’ கிடார் கலைஞர் சந்திரசேகர் மறைந்தார்... பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்
சென்னை: தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் குழுவைச் சேர்ந்தவர் கிடாரிஸ்ட் சந்திரசேகர்.
இளைய நிலா பொழிகிறதே உட்பட ஏராளமான பாடல்களுக்கு கிடார் இசையமைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
இந்நிலையில், கிடாரிஸ்ட் சந்திரசேகர் மறைந்துவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், எழுத்தாளர், பாடலாசிரியர் சுகா ஆகியோர் தங்களது முகநூலில் பதிவிட்டுள்ளனர்.
இளையராஜா இசைக் குழுவின் நீண்டகால உறுப்பினர்களில் ஒருவரான சந்திரசேகரின் மறைவு இசையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிடாரிஸ்ட் சந்திரசேகர்
இளையராஜாவின் நீண்டகால நண்பரும், அவருடன் அன்னக்கிளி படத்திலிருந்து பணிபுரிந்தவருமான மூத்த இசைக் கலைஞர் சந்திரசேகர் காலமானார். இளையராஜாவின் குழுவில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றி வந்தவர்களில் இவரும் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சகோதரர் புருஷோத்தமன், இளையராஜாவின் குழுவில் டிரம்மராகவும் மியூஸிக் கன்டக்டராகவும் பணியாற்றியவர்.

இசையுலகில் சோகம்
2020ம் ஆண்டில் புருஷோத்தமன் மறைந்த நிலையில், இன்று கிடாரிஸ்ட் சந்திரசேகரும் காலமானது இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இளையராஜா இசையமைத்துள்ள விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சியோடு இந்த விழா நடந்து முடிந்த நிலையில், சந்திரசேகரின் மறைவு இசையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாவின் தளபதிகள்
கிடாரிஸ்ட் சந்திரசேகரின் சகோதரர் புருஷோத்தமன், இளையராஜாவிடம் பல ஆண்டுகளாக டிரம்மராகவும் மியூசிக் கன்டக்டராகவும் பணியாற்றினார். இளையராஜாவின் ஆரம்ப கால நண்பர்களில் புரு, கிடாரிஸ்ட் சதானந்தம், கீ போர்ட் கலைஞர் விஜி மேனுவல், வயலின் இசைக்கலைஞர் வி.எல். நரசிம்மன், வயாலோ ஜூடி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களுடன் கிடாரிஸ்ட் சந்திரசேகரும் இளையராஜாவின் தளபதிகளில் ஒருவராக வலம் வந்தார்.

பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கல்
பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம்பெற்ற 'இளைய நிழா பொழிகிறதே' பாடலின் கிடார் இசைத் துணுக்குகளை வாசித்து புகழ் பெற்றவர் சந்திரசேகர். இந்தப் பாடல் மட்டுமின்றி இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களுக்கும் சந்திரசேகர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஏராளமான இசை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிடாரிஸ்ட் சந்திரசேகர் மறைந்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், எழுத்தாளர், பாடலாசிரியர் சுகா ஆகியோர் தங்களது முகநூலில் பதிவிட்டுள்ளனர். இதனையறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications