முழு ஈடுபாடும் இசையில்தான் இருக்கிறது.. நீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளித்த இளையராஜா
சென்னை: இசைஞானி என ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா தற்போதும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். திரைப்படங்களுக்கு இசையமைப்பது, சிம்பொனி உருவாக்குவது என தன்னை எப்போதும் இசையோடு தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவரது இசையில் கடைசியாக விடுதலை 2 வெளியானது. அடுத்ததாக தினசரி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார்.
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா 50 வருடங்களாக தமிழ் சமூகத்துக்கு இசை பங்களிப்பை செய்துவருகிறார். அவரது இசையை தமிழர்கள் ஒரு நாளும் கேட்காமல் அந்த நாளை கடத்த முடியாது. அந்த அளவுக்கு அவரது இசை தாக்கம் நிறைந்திருக்கிறது. இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்களுக்கும் பயங்கரமான போட்டியை கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதேபோல் தற்போதைய தலைமுறையினரையும் தன்னுடைய இசையை ரசிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

பிஸி இசையமைப்பாளர்: அவரது இசையமைப்பில் கடைசியாக ஜமா, விடுதலை 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களிலுமே தன்னுடைய சிறந்த இசையை கொடுத்திருந்தார். முக்கியமாக வெற்றிமாறன் இயக்கத்தி வெளியான விடுதலை 2 படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் அனைவரையும் ரசித்தது. இடைவேளை காட்சியில் அவர் போட்டி பிஜிஎம் பக்காவாக இருந்தது என்று படம் பார்த்தபோதே ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படங்கள்: அதேபோல் அடுத்ததாக அவர் தினசரி என்ற படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும், சிந்தியா என்பவர் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். விரைவில் அந்தப் படம் வெளியாகவிருக்கும் சூழலில்; அதில் இடம்பெற்றிருந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற பாடல் ட்ரெண்டானது. அதேபோல் சினிமாவில் இசையமைப்பது மட்டுமின்றி சிம்பொனியை உருவாக்குவதிலும் அவர் கவனத்தை செலுத்திவருகிறார். சமீபத்தில்கூட ஒரு சிம்பொனியை அவர் உருவாக்கியிருந்தார்.
காப்புரிமை: இதற்கிடையே தன்னுடைய பாடல்களை தன் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்பதில் ஆணித்தரமாக இருப்பவர் இளையராஜா. தனது நீண்ட கால நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம்கூட அந்த கறார்தனத்தை கடைப்பிடித்தார். மேலும் பிற சினிமாக்களில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தக்கூடாது என்று வழக்கும் தொடர்ந்திருக்கிறார். அதேசமயம் என் இனிய பொன் நிலாவே பாடல் உரிமை இளையராஜாவிடம் இல்லை சரிகமா நிறுவனத்திடம்தான் இருக்கிறது என்று சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இளையராஜா ஆஜர்: இந்நிலையில் குணா, தேவர் மகன் உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தங்களிடம் இருப்பதாகவும்; அந்தப் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்; தங்கள் அனுமதியில்லாமல் வெளியிடப்படக்கூடாது என்று மியூசிக் மாஸ்டர் என்னும் இசை நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் இளையராஜா எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் மாஸ்டர் நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது அவர் தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். அங்கு அவர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் எனது முழு ஈடுபாடும் இசையில் மட்டும்தான் இருக்கிறது. இந்தப் புகழ், பணம் எல்லாம் சினிமாவின் மூலம்தான் கிடைத்தது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











