Bhavatharani - கேன்சரில் 4ஆவது ஸ்டேஜ்.. கதறி அழுத பவதாரணி.. இளையராஜா மகள் மரணம் பற்றி உறவினர் சொன்ன ரகசியம்
சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரணி பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இலங்கைக்கு சென்ற அவர் கடந்த சில மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சூழலில் பவதாரணியின் உறவினர் விலாசினி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி. சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்ட அவர் ராசய்யா படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலாக, 'காதல் வானிலே காதல் வானிலே' பாடலை பாடிய அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். தனித்துவமான குரல் வளம் கொண்ட அவர் ஒவ்வொரு பாடலிலும் தனது திறமையை நிரூபித்துவந்தவர். இளையராஜா இசையில் அதிகம் பாடியிருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, சிற்பி போன்ற இசையமைப்பாளர்களுக்கும் பாடியிருக்கிறார்.

கேன்சர்: கடைசியாக அனேகன் படத்தில் 'ஆத்தாடி ஆத்தாடி' பாடலை பாடிய அவர் இதுவரை பத்து படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். இந்த சூழலில் அவருக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதனையொட்டி அவர் சென்னையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இங்கு சரியாகாததால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்க முடிவு செய்து அங்கு சில மாதங்களுக்கு முன்பு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விலாசினி பேட்டி: இந்நிலையில் பவதாரணியின் தாய் மாமாவின் மகள் விலாசினி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "பவதாரணியும் நானும் ரொம்பவே நெருக்கமானவர்கள். ஒருமுறை இளையராஜாவுக்கு ஃபோன் செய்து எங்கே மாமா இருக்கிறீர்கள் என்று கேட்டேன். உடனே அழுதுகொண்டே அவர், 'உங்க அக்காவை கடைசியாக வந்து பார்த்துட்டு போ' என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவருக்கு நான்காவது கட்ட கேன்சர் இருந்தது போன மாதம்தான் தெரியவந்தது. அதை மருத்துவர்கள் குடும்பத்திடம் சொன்ன பிறகு; பவதாரணியிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.
பேசாம விட்டுடுங்க: இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எனது அம்மா பவதாரிணியின் ரிப்போர்ட்டுகளை வாங்கிக்கொண்டு மருத்துவராக இருக்கும் எங்களது உறவினரிடம் காண்பித்தார். அவரோ, பேசாம விட்டுடுங்க என்று சொல்லிவிட்டார். அது மேற்கொண்டு எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. போன வருட கொலுவுக்கு நானும் அம்மாவும் இளையராஜா வீட்டுக்கு சென்றிருந்தோம். அப்போதே அவர் ரொம்பவே மெலிந்துவிட்டார். அவரை இன்னும் கொஞ்சம் காலம் வைக்க எல்லா வேலைகளிலும் நாங்கள் இறங்கினோம். ஆனால் மருத்துவர்களோ, முதலில் அவரை உடலை தேற்றிக்கொண்டு வர சொல்லுங்கள். சிகிச்சைகளை அவர் தாங்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள்.
இலங்கைக்கு சென்றார்கள்: உறவினர் வாசுகி, பவதாரணியின் கணவர் சபரி, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பவதாவை அழைத்துக்கொண்டு இலங்கை சென்றார்கள். சரி ஆயுர்வேதா சிகிச்சையில் இருக்கிறார் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பவதாரணி நீண்ட காலம் உயிரோடு இருக்கமாட்டார் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் அவரை இழப்பதற்கு நாங்க தயாராக இல்லை. முன்பே அவரது பித்தப்பையில் பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை இவர்கள் ஸ்டோன் என்று நினைத்துக்கொண்டு அசால்ட்டாக விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.
அழுத பவதாரணி: ஒருமுறை அவர் மருத்துவமனையில் இருந்தார். அப்போது எழுந்து அமர்ந்து பேசும் நிலையில்தான் இருந்தார். அந்த சமயத்தில் எனது தந்தை (பவதாரணியின் தாய் மாமா) அவரை பார்ப்பதற்காக சென்றார். எனது தந்தையை பார்த்தவுடனேயே பவதாரணி கதறி அழுதுவிட்டார். ஆனால் நீங்கள் பதிலுக்கு அழக்கூடாது; அதையும் வெளியில் காண்பித்துக்கொள்ளக்கூடாது என்று தந்தையிடம் ஏற்கனவே நாங்கள் சொல்லியிருந்தோம். எனவே அவர் அனைத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று தைரியம் சொல்லிவிட்டு வந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











