கவனம் அதில்தான் இருந்தது.. குழந்தைகளை கவனித்திருக்கலாம்.. மகள் பவதாரிணி குறித்து இளையராஜா உருக்கம்
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவரும், கொண்டாடப்படுபவரும் இளையராஜா. அவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என்ற மகன்கள் இருக்கிறார்கள். பவதாரிணி என்ற மகள் இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வருடம் இதே நாளில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இளையராஜாவின் குடும்பத்தினரை மட்டுமின்றி இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தச் சூழலில் இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராஜா உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. அவரது இசை என்றாலே அனைவரும் ரசிப்பார்கள். தலைமுறைகள் தாண்டியும் நிலைத்து நிற்கக்கூடிய இசையை வழங்கிய அவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என்ற மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் தமிழ் சினிமாவில் ஃபேமஸான இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பவதாரிணி என்ற மகளும் இருந்தார். அவரும் பின்னணி பாடகி, இசையமைப்பாளர் என இரு முகங்களை கொண்டிருந்தவர்.

சிறந்த பாடகி: பவதாரிணியை பொறுத்தவரை சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். ஆனால் பாடல்கள் ஏராளம் பாடியிருக்கிறார். அவரது குரலும், பின்னணி பாடகி ஜானகியின் குரலும் ஒத்துப்போகும் என்று ரசிகர்கள் கூறுவதுண்டு. ராமன் அப்துல்லா படத்தில் இடம்பெற்ற என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்குற, அழகி படத்தில் இடம்பெற்ற ஒளியிலே தெரிவது தேவதையா, ராசைய்யா படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா, பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம்பெற்ற புத்தது பூத்தது பூவு என பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
புற்றுநோய்: பவதாரிணி மீது இளையராஜாவுக்கு அலாதி பிரியம் உண்டு. அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பவதாரிணி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள். சூழல் இப்படி இருக்க அவருக்கு புற்று நோய் இருப்பது சில வருடங்களுக்கு முன்பு தெரியவந்தது. அதனையடுத்து முதலில் அவருக்கு இந்தியாவில் வைத்து சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பெரிதாக பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இலங்கைக்கு அவரை அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்கள்.
உயிரிழப்பு: ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வருடம் இதே நாள் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இளையராஜாவையும், அவரது குடும்பத்தினரையும் நிலைகுலைய செய்தது. அவருக்கு இறக்கும்போது வயது 38 தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் இளையராஜாவின் சொந்த ஊரில் அவரது மனைவி ஜீவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இளையராஜா உருக்கம்: இதனையொட்டி இளையராஜா உருக்கத்துடன் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோவில், "எனது அருமை மகள் பவதா எங்களை விட்டு பிரிந்த நாள். அவர் மறைந்த பிறகுதான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்புமயமாக இருந்திருக்கிறார் என்பது புரிந்தது. ஏனெனில் எனது கவனம் இசை மீது மட்டும்தான் இருந்ததால் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டது இப்போது எனக்கு வேதனையை தருகிறது. அந்த வேதனைதான் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் எனது மனதுக்கும் ஆறுதலாக இருக்கிறது. பவதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 12ஆம் தேதிதான் அவருடைய திதி வருகிறது. அது இரண்டையும் சேர்த்து நினைவு நாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற முடிவெடுத்திருக்கிறோம். அதில் அனைத்து இசை கலைஞர்களும் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











