ஆமா எனக்கு கர்வம் இருக்குதுதான்.. ஓபனாக போட்டுடைத்த இசைஞானி இளையராஜா
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் கடைசியாக விடுதலை 2 படத்தில் இசையமைத்திருந்தார். அடுத்ததாக சில படங்களுக்கும் இசையமைக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் தனக்கு கர்வம் இருப்பதாக பிறர் கூறுவது குறித்து முதன்முதலாக மௌனம் கலைத்து பேசியிருக்கிறார் இளையராஜா.
தமிழ் திரையிசையில் இளையராஜாவின் பங்கு மிக பெரியது. அவர் வந்து இசையமைத்த பிறகு பாட்டு பாட பாமரனும் வாயை திறந்தான். அன்னக்கிளியில் அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் முத்து ரகத்தில் இருப்பவை. அந்தப் பாடல்களை கேட்ட பிறகு அட இது என்னப்பா நம்ம ஊர் இசையால்ல இருக்கு என்று பலரும் ரசிக்க தொடங்கினார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு தமிழ் திரையிசையின் முகத்தை பெரிதாக மாற்றிக்காட்டியவர் இளையராஜா மட்டும்தான் என்பது யாராலும் மறுக்க முடியாதது.

தொட்டதெல்லாம் ஹிட்: இளையராஜா முதன்முதலாக அன்னக்கிளியில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். அதற்கு பிறகு இளையராஜாவின் கோட்டையாக தமிழ் சினிமா திகழ்ந்தது. மற்ற இசையமைப்பாளர்கள் அந்த கோட்டைக்குள் நுழைந்தாலும் ராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளையராஜாவும் தனது ஒவ்வொரு இசையிலும் வெரைட்டி காண்பித்து ரசிகர்களை தனது தளபதியாக வைத்துக்கொண்டார்.
பண்டிகை காலம்: இளையராஜா போல் வேறு எந்த இசையமைப்பாளரும் பிஸியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும். அதேபோல் ஒரு பண்டிகைக்கு இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டுமே ஏராளம் வந்தது உண்டு. அந்த அளவுக்கு இளையராஜா பிஸியாக இருந்தார்.
எட்டாவது அதிசயம்: இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலின் ட்யூனும் இன்னொரு பாடலுக்கு ரிப்பீட் ஆகாமல் இதுவரை அவர் இசையமைத்துவருவது எட்டாவது அதிசயம் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இப்படி புகழின் உச்சியில் இருந்தாலும் இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறுவார்கள். அவர் மீது விமர்சனங்கள் பல வந்தாலும் எந்தவிதமான ரியாக்ட்டும் அவர் செய்ததே இல்லை.
முதன்முதலாக: இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் முதன்முதலாக அதுகுறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "எனக்கு கர்வம் இருப்பதாக சிலர் சொல்வார்கள். ஆமா எனக்கு கர்வம் இருக்குதுதான். எனக்கு கர்வம் இல்லாமல் வேறு யாருக்கு கர்வம் இருக்க வேண்டும்" என்றார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











