எதாவது சாதித்துவிட்டு அப்பறம் பேசுங்க.. இளம் இசை அமைப்பாளர்கள் மீது.. இசைஞானி இளையராஜா ஓபன்!
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் அடையாளமாக உள்ளார். கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்து, இசையைக் கற்றுக் கொண்டு, தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகின்றது. இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இன்றைய இளம் இசை அமைப்பாளர்கள் குறித்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், " நான் எனது வேலைகளைத்தான் செய்து கொண்டு இருக்கின்றேன். ஆனால் என்னைப் பார்த்து எனக்கு திமிர் இருக்கு, கர்வத்தோடு இருக்கின்றேன் எனக் கூறுகின்றார்கள். நான் கர்வத்தோடு இல்லாமல் வேறு யார் கர்வத்தோடு இருப்பார்கள்? ஆனால் எனக்கு அப்படி எதுவும் இல்லை. எனக்கு திமிர் எல்லாம் இல்லை. ஆனால் திமிர் இல்லாத என்னைப் பார்த்து ஒருவன் எனக்கு திமிர் எனக் கூறினால், அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கவேண்டும்? அவனைப் பார்த்து நான் கேட்கின்றேன்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அமைத்த இசையைப் பார்த்து, ஒரு சில பாடல்களை நான் வேறு ஏதோ ஒரு மேலை நாட்டு இசையில் இருந்து திருடிவிட்டேன் என 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்து கூறுகின்றார்கள். ஆனால் நான் உலகில் இவ்வளவு இசை உள்ளது என நம் மக்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளேன். ஒரு வரி மட்டும்தான் மேலை நாட்டு இசையில் இருந்து எடுத்தேன். மீதி எல்லாம், அவர்கள் சொல்லக் கூடிய இசை அமைப்பாளரா இசை அமைத்தார்? நான் தானே இசை அமைத்தேன்.
சிம்பனி: நான் சிம்பனி அமைக்க ஏன் வெளிநாட்டுக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றேன் என்றால், அவர்கள்தான் உடலும் உயிருமாக இசையை ஒருங்கிணைத்துக் கொண்டுவருகின்றார்கள். நம்மூரில் கணினியில் கை வைத்தால் இசை வந்துவிடுகின்றது என்கின்றார்கள். அப்படியானவர்களை வைத்துக் கொண்டு நான் எப்படி சிம்பனி உருவாக்க முடியும்?
பொறாமை: இன்றைக்கு என்னை பார்த்து, வயிறு எரிந்து போகின்றவர்கள்தான் அதிகம் உள்ளார்கள். இவன் என்னடா திடீர்னு சிம்பனி செய்யறான், திடீர்னு திருநெல்வேலியில கச்சேரி செய்யறான், திடீர்னு படத்துக்கு மியூசிக் போடுறான் என என்னைப் பார்த்து பொறாமைப் படுகின்றவர்கள்தான் அதிகம். என்னைப் பாராட்ட யாருக்கும் மனம் இருப்பதில்லை.
இளைஞர்கள்: இன்றைக்கு இளைஞர்கள் மிகவும் திறமையானவர்களாக உள்ளார்கள். ஆனால் அவர்கள் இசையை உருவாக்க வேண்டும். மாறாக ஏ.ஐ. தொழில் நுட்பத்தினைக் கொண்டு இசை அமைக்கக்க கூடாது. மாறாக ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் போட்டி போடவேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பம் இளைஞர்களின் அறிவை மங்கச் செய்துவிடும். அவர்கள் துள்ளிக் குதித்து வரவேண்டும் என்றுதான் நான் கூறுகின்றேன். எதாவது சாதித்துவிட்டு உங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள், அல்லது மக்கள் உங்களை அறிந்து கொள்ளும் வகையில் ஏதாவது செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இவரது பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











