சிம்பொனி முடிந்து திரும்பிய இளையராஜா அதிரடி பேச்சு.. 82 வயசு ஆனா என்ன?.. இனிமேல்தான் ஆரம்பமாம்
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் நேற்று முன்தினம் லண்டனில் இருக்கும் அப்பல்லோ அரங்கத்தில் வேலியன்ட் என்கிற பெயரில் சிம்பொனியை அரங்கேற்றினார். இந்தியாவிலிருந்து சிம்பொனியை அரங்கேற்றிய முதல் நபர் என்கிற பெருமையை பெற்ற அவர்; இன்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பல விஷயங்களை பேசினார்.
இளையராஜா என்றாலே அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு அவர் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார். அவரது இசை இல்லாமல் ஒரு நபர்கூட ஒரு நாளினை கடந்தது இல்லை. இன்பம், துன்பம், தோல்வி, வெற்றி, கொண்டாட்டம் என மனிதனின் அத்தனை உணர்வுகளுக்கும் அவரது இசைதான் எப்போதும் துணையிருக்கக்கூடியவை. எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்கள் அனைவருமே; இளையராஜா போட்டுக்கொடுத்த பாதையில்தான் தாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் என்று ஓபனாகவே சொல்வதுண்டு.
இந்த வயதிலும் உழைப்பு: இளையராஜாவுக்கு தற்போது 82 வயது ஆகிறது. இந்த வயதில் பலரும் ஓய்வெடுக்கத்தான் விரும்புவார்கள். ஆனால் ராஜாவோ ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து தனது உழைப்பை கொட்டிவருகிறார். தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; அவரை கொண்டாடாமல் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. தன்னை தலைக்கனம் என்று சொல்பவர்களுக்கெல்லாம் தனது இசையால் தொடர்ந்து பல வருடங்களாக பதிலளித்துக்கொண்டே இருக்கிறார்.

சிம்பொனி: சூழல் இப்படி இருக்க அவர் வேலியன்ட் என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றை உருவாக்கினார். அந்த சிம்பொனியை அரங்கேற்றம் செய்ய லண்டனில் இருக்கும் அப்பல்லோ அரங்கமும், மார்ச் 8ஆம் தேதியும் ஃபிக்ஸ் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இதனையடுத்து இளையராஜா சில நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
அரங்கேறிய சிம்பொனி: ஃபிக்ஸ் செய்யப்பட்டபடி நேற்று முன்தினம் லண்டனில் இருக்கும் அப்பல்லோ அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றினார் ராஜா. மொத்தம் நான்கு பகுதிகளாக கொண்ட அந்த சிம்பொனியை மொத்தம் 80 இசை கலைஞர்கள் இசைத்தார்கள். ஒவ்வொரு பகுதி முடிந்த பிறகும் அரங்கில் கூடியிருந்தவர்கள் மெய் சிலிர்த்துப்போய் இளையராஜாவை கொண்டாடி தீர்த்தார்கள். உலகளவில் இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் அவர்.
திரும்பிய இசைஞானி: இந்நிலையில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சிம்பொனி இசை நான்கு பகுதிகளை கொண்டது. பொதுவாக அந்த அரங்கத்தில் இருப்பவர்கள் நான்கு பகுதிகள் முடிந்த பிறகுதான் கை தட்டுவார்கள். ஆனால் என்னுடைய சிம்பொனிக்கு ஒவ்வொரு பகுதி முடிந்ததுமே கை தட்டினார்கள். 80 இசை கலைஞர்களும் ஒரே நேரத்தில் வாசிப்பதை நான் அருகில் இருந்து செக் செய்துகொண்டே இருந்தேன். அதேபோல் சிம்பொனி அரங்கேற்றம் முடிந்த பிறகு அந்த மேடையில் என்னுடைய பாடல்களையும் பாடினேன். அதனையும் கொண்டாடினார்கள்.

நான் இசை கடவுள் இல்லை: இந்த சிம்பொனியை 13 நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான தேதிகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. அதேபோல் தமிழ்நாட்டிலும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நேரில் வந்து அந்த இசையை கேட்டு அனுபவிக்க வேண்டும். என்னை ரசிகர்கள் இசை கடவுள் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் இசை கடவுள் இல்லை. இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே கொண்டு வந்துவிட்டார்களே என்றுதான் எனக்கு தோன்றுகிறது. நான் ஒரு சாதாரண மனிதன்தான். அப்படித்தான் நான் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெறுங்கால்களோடுதான் இருந்தேன்: பண்ணைபுரத்திலிருந்து நான் கிளம்பும்போது வெறுங்கால்களோடுதான் நடந்தேன். அதேபோல்தான் இப்போதும் யாரின் துணையுமின்றி வெறும் கால்களோடும், என் கால்களோடும்தான் இங்கு நான் நின்றுகொண்டிருக்கிறேன். இளைஞர்கள் அதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அவரவர் துறையில் வளர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதுதான் ஆரம்பமே: எனக்கு 82 வயது ஆகிவிட்டதே இனி என்ன செய்ய முடியும் என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இதுதான் ஆரம்பமே. நீங்கள் நினைக்கும் எதற்குள்ளும் அடங்காதவன் நான். இந்த சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்க வேண்டாம். லண்டனில் ஒரு அரங்கத்தில் அத்தனை அமைதியோடு கேட்டார்கள். அந்த அமைதியோடு இந்த இசையை கேட்டால்தான் அனுபவிக்க முடியும். என்னை அன்போடும், வாழ்த்தோடும் அனுப்பி வைத்தீர்கள். இப்போது அரசு மரியாதையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் என்னை வரவழைத்திருக்கிறார். அதற்கும் நன்றி" என்றார்.
முன்னதாக சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துவிட்டு அந்த மேடையில் இளையராஜா, 'சிம்பொனியை என்னால் விளக்க முடியாது. அதனை நீங்கள் அனுபவிக்க வேண்டும்' தனக்கேயுரிய பாணியில் பேசினார். அந்தப் பேச்சும் பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அதே மேடையில் தான் இசையமைத்த இதயம் போகுதே, கண்ணே கலைமானே உள்ளிட்ட சில பாடல்களையும் பாடினார். அவரது சிம்பொனிக்கு கிடைத்த வரவேற்பு போலவே அந்தப் பாடல்களுக்கும் அப்பல்லோ அரங்கத்தில் பெரிய அப்ளாஸ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும் அதே சிம்பொனியை அரங்கேற்றம் செய்யவிருப்பதாக இளையராஜா அறிவித்திருப்பதால் அந்த நாள் எப்போது வரும் என்று ரசிகர்கள் இப்போதிருந்தே சமூக வலைதளங்களில் கேள்விகளை கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.
பண்டிகை காலம்: இளையராஜா போல் வேறு எந்த இசையமைப்பாளரும் பிஸியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும். அதேபோல் ஒரு பண்டிகைக்கு இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டுமே ஏராளம் வந்தது உண்டு. அந்த அளவுக்கு இளையராஜா பிஸியாக இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அளவுக்கு யாரும் பிஸியாக இருந்ததில்லை.
எட்டாவது அதிசயம்: இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலின் ட்யூனும் இன்னொரு பாடலுக்கு ரிப்பீட் ஆகாமல் இதுவரை அவர் இசையமைத்துவருவது எட்டாவது அதிசயம் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இப்படி புகழின் உச்சியில் இருந்தாலும் இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறுவார்கள். அவர் மீது விமர்சனங்கள் பல வந்தாலும் எந்தவிதமான ரியாக்ட்டையும் அவர் செய்துகொண்டதே இல்லை.
லிடியன் நாதஸ்வரம்: இதற்கிடையே இளையராஜா அமைத்த சிம்பொனியை லிடியன் நாதஸ்வரம்தான் எழுதிகொடுத்தார் என்று வதந்தி பரவியது. அதுகுறித்து விளக்கமளித்திருந்த இளையராஜா, 'லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்றுக்கொண்டிருக்கிறார்தான். ஆனால் அவர் எனக்கு சிம்பொனியை எழுதி தரவில்லை. ஒருமுறை நான் ஒரு சிம்பொனி அமைத்திருப்பதாக கூறி என்னிடம் வாசித்து காண்பித்தார். அவர் வாசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே அதனை நிறுத்த சொல்லிவிட்டேன். மேலும் இது சினிமா பிஜிஎம் மாதிரி இருக்கிறது. சிம்பொனி என்றால் என்னவென்று தெரிந்துகொண்டு சிம்பொனியை அமைத்து காட்டு என கூறினேன்' என்றார். இளையராஜாவுக்கு லிடியன்தான் சிம்பொனி அமைத்து தந்ததாக கூறியது வேண்டுமென்றே ராஜாவுக்கு இழுக்கு ஏற்படுத்தத்தான் என அவரது ரசிகர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











