மதுரையில் இளையராஜாவின் இன்னிசை மழை... ஏப்ரல் 5-ம் தேதி நடக்கிறது!
சென்னை: இசைஞானி இளையராஜா பங்கேற்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மதுரை மாநகரில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவிடம் பாடிய அத்தனை பாடகர்களும் பங்கேற்கிறார்கள். இளையராஜாவும் கலந்து கொள்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா சமீபத்தில் மலேசியாவில் கிங் ஆப் கிங் என்ற பெயரில் இளையராஜா பாடல்களை கச்சேரியாக நடத்தினார். இதில் ராஜா பங்கேற்பதாக இருந்து, உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் கலந்து கொள்ளவில்லை.
ஆனாலும், ரசிகர்களுக்காக வீடியோ கான்பரசிங் மூலம் இந்த நிகழ்ச்சியில் பேசினார்.

மதுரையில்...
இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இதுபோல் மதுரையிலும் இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்த கார்த்திக் ராஜா முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இன்று கார்த்திக் ராஜா பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.

இளையராஜாவின் சங்கீதத் திருநாள்
இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சியை ‘ராஜாவின் சங்கீத திருநாள்' என்ற பெயரில் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி மதுரையில் நடத்த உள்ளோம்.

பண்ணைப் புரத்திலிருந்து...
இந்த நிகழ்ச்சியை மதுரையில் நடத்த முடிவெடுத்த காரணம், அப்பா இளையராஜா நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் உடல்நலனை விசாரித்து வந்த முதல் அழைப்பு பண்ணைப் புரத்திலிருந்துதான். அடுத்தடுத்து பண்ணைபுரத்திலிருந்து அழைப்புகள். கண்ணீர் விட்டு அழுதபடி, நேரில் வந்து பார்க்க விரும்பினர். தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் தொலைபேசி மூலம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
அப்பாவின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு யாரையும் நேரில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.

நம் மக்களுக்காக
இதனால், வெளிநாடுகளில் எல்லாம் இசை நிகழ்ச்சி நடத்தும்போது, நம் ஊர் மக்களுக்காக நாம் ஏன் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என முடிவு செய்தோம். அதனாலேயே இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

இடவசதி இல்லாததால்
முதலில், பண்ணைபுரத்தில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தோம். ஆனால், அங்கு போதுமான இடவசதி இல்லாததால் மதுரையை தேர்வு செய்தோம். மதுரையைத் தொடர்ந்து தேனியிலும் இந்த இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

இளையராஜாவுடன் அனைத்து பாடகர்களும்
இந்த நிகழ்ச்சியில் அப்பா இளையராஜாவும் கலந்துகொள்வார். மேலும், பல முன்னணி பாடகர்களும் கலந்து கொண்டு இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட உள்ளனர். எல்லா கவிஞர்களின் பாடல்களும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும்," என்றார்.


Click it and Unblock the Notifications











