உலகத்தில் உதவ யாருமே கிடையாது.. நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்.. இளையராஜா ஓபன் டாக்
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா கடைசியாக விடுதலை 2 படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அடுத்ததாக இன்னும் சில படங்களுக்கு இசையமைக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தான் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் குறித்து பல விஷயங்களை பேசினார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சொத்து இளையராஜா என்று போற்றப்படுபவர். இதுவரை 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசத்தை காண்பிப்பவர். அதேபோல் சமீபத்தில்தான் சிம்பொனி இசையையும் முடித்தார். கடைசியாக அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2 படத்துக்கு இசையமைத்தார். படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் தனது சிறந்த இசையை வழங்கினார் அவர். இந்தச் சூழலில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

இளையராஜாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான் எங்களுடைய அண்ணன் பாடுவதை கேட்டுத்தான் இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒருமுறை எனது அண்ணன் வெளியே சென்ற பிறகு எனது அம்மாவிடம் நான், 'வெளியே சென்று நான் இசை கற்றுக்கொள்ள வேண்டும் அம்மா' என்று சொன்னேன். உடனே என்னுடைய அம்மா சரி என்று சொல்லிவிட்டு வீட்டில் இருக்கும் ரேடியோவை விற்று உடனடியாக 400 ரூபாய் தந்தார். கொடுத்துவிட்டு இது போதுமா என்றும் கேட்டார். அவர் நினைத்திருந்தால் வீட்டு செலவுக்கு 100 ரூபாயை வைத்துக்கொண்டு 300 ரூபாயை கொடுத்திருக்கலாம்.
மதுரை பயணம்: அப்படி கொடுத்திருந்தாலும் நாங்கள் ஒன்றும் நினைத்திருக்கமாட்டோம். அம்மாவும் அதை பற்றி எங்களிடம் எதுவுமே கேட்கவில்லை. அவருடைய வார்த்தைதான் எங்களை வழிநடத்தியது. அவர் வாழ்த்து சொல்லும் மாதிரி வேறு யார் சொன்னாலும் இருக்காது. எங்காவது போகிறேன் என்று சொன்னால் போயிட்டு வாங்கப்பா என்றுதான் சொல்வார். வேறு எதுவும் சொல்லமாட்டார். அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு சென்னை போகலாம் என்று முடிவு எடுத்தோம். அந்த சமயத்தில் மதுரைக்கு சென்று சில கச்சேரிகள் செய்து மேற்கொண்டு பணம் சேர்த்து சென்னை போகலாம் என்று தோன்றியது.
கற்றுக்கொண்ட பாடம்: அப்படித்தான் நாங்கள் மதுரைக்கு சென்றோம். ஆனால் அங்கு சென்ற ஒரே நாளில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் இந்த உலகத்தில் உனக்கென உதவ யாரும் இல்லை என்பதைத்தான். மேலும் நீயாக உழைத்து முன்னேற வேண்டும் என்றும் தெரிந்துகொண்டோம். அதற்கு பிறகு அன்றைய இரவே சென்னைக்கு பேருந்து ஏறிவிட்டோம். அப்போதுதான் அன்னக்கிளி படத்துடைய கதாசிரியர் செல்வராஜ் பேருந்து நிலையத்துக்கு வந்தார். எங்களிடம் என்னவென்று விசாரித்தார். சென்னை போகிறோம் என்று சொன்னோம். அவரோ, போங்க அங்க உங்களுக்கு இருக்கு என்று கிண்டல் செய்தார்.
சினிமாவில் வாய்ப்பு: சென்னைக்கு வந்தும் சினிமாவில் இசையமைக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இல்லை. இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் இருந்தது. ஆனால் எனக்கோ சில மாதங்களிலேயே எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. என்னுடைய மாஸ்டர் , 'கோவாவில் சிஐடி 999' என்று படத்துக்கு இசையமைத்தார். சிச்சுவேஷனை சொல்லிவிட்டு இயக்குநர் சென்றுவிட்டார். அப்போது மாஸ்டர் என்னிடம், நோட்ஸ் சொல்கிறேன் எழுதிக்கொள் என்று சொன்னார். ஆனால் நானோ, நீங்கள் 2 முறை சொல்லுங்கள் மனப்பாடம் ஆகிவிடும் என்று கூறினேன். அவரும் பத்து நோட்ஸ் சொன்னார். அதை நான் கரெக்ட்டாக சொல்லிவிட்டேன். அதை பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











