Ilayaraaja - இந்த உலகத்திலேயே நான் மட்டும்தான் செய்திருக்கிறேன்.. கர்வம் கிடையாது.. இளையராஜா ஓபன் டாக்
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் கன்னியாகுமரி மீனவரிலிருந்து வரப்பில் இருக்கும் விவசாயிவரை அனைவரும் இசைக்காக வாய் திறந்தனர். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இந்த சூழலில் அவர் சமீபத்தில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் இசையை மாற்றியவர்களில் முதன்மையானவர் இளையராஜா. மேடை நாடகங்களுக்கு தனது சகோதரர்களுடன் இசையமைத்துக்கொண்டிருந்த இளையராஜா அன்னக்கிளி படம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டாகின. இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் இசையை கேட்டபிறகுதான் வரப்பில் இருப்பவரின் வாயும் பாடலுக்காக திறந்தது.

அன்னக்கிளி: அன்னக்கிளி பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளையராஜா தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருமாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு படு பிஸியாக இருந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பத்து பட பாடல்களும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படியும் அமைந்ததுதான். அந்த அளவுக்கு இளையராஜா தனது உயிரை கொடுத்து உழைத்தார்.
இயக்குநர்களின் காத்திருப்பு: இளையராஜாவின் இசை இருந்தால்போதும் தங்களுடைய படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே அப்போதைய இயக்குநர்களுக்கு இருந்தது. இளையராஜாவுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இதுவரை எந்த இயக்குநருக்கும் இளையராஜா இசை இருந்தால் ஹிட் என்ற நம்பிக்கை வேறு இசையமைப்பாளர் மீது இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி: இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா கடைசியாக மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலாஜிக்கு மூன்று கதைகளுக்கும், வட்டார வழக்கு படத்துக்கு இசையமைத்தார். மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலாஜிக்கு அவர் அமைத்த இசை இப்போதைய 2K கிட்ஸுகளுக்கும் பிடித்துப்போயிருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் இளையராஜா எப்போதுமே வற்றாத இசை நதி என்பதை. அடுத்ததாக அவரது இசையமைப்பில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது.
கர்வம்: இளையராஜாவுக்கு இப்படி பல பெருமைகள் இருந்தாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்படுவதுண்டு. அதாவது அவர் யாரையும் மதிப்பதே இல்லை; தான் மட்டுமே இசையமைப்பாளர் என்ற மிகப்பெரிய கர்வத்தில் இருக்கிறார் என்றும் பலர் கூறுவார்கள். இந்நிலையில் ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் மால்யத் என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
கர்வத்திலிருந்து வெளியே: அதில் பேசிய இளையராஜா, “கர்நாடக சங்கீதத்தில் நான் கைதேர்ந்தவன் இல்லை. அதனால் இசைஞானி என்ற பட்டத்துக்கு நான் தகுதியானவனா என்பது பெரிய கேள்விக்குறிதான். ஆனால் மக்கள் என்னை இசைஞானி என அழைக்கிறார்கள். அதற்கு நான் வணங்குகிறேன். அதனால் எனக்கு எந்த கர்வமும் கிடையாது. நான் பல்வேறு விழாக்களில் ஹார்மோனியம் வாசித்தபோது மக்கள் கைத்தட்டி ஊக்கம் கொடுப்பார்கள்.
யாருக்கு கைத்தட்டு: அந்த கைத்தட்டல் யாருக்கு கிடைக்கிறது என்ற சந்தேகம் ஒருகட்டத்தில் எனக்கு எழுந்தது. நான் இசைத்த பாடல்களுக்கான மெட்டினை அமைத்தவருக்கு கைத்தட்டல் கிடைக்கிறது என்று எனக்கு புரிந்தது. அதனால் கர்வத்திலிருந்து நான் எப்போதோ வெளியே வந்துவிட்டேன். எனவே எந்த புகழும் பாராட்டும் எனக்கு ஒட்டாது. உண்மையில் அதுகுறித்த சிந்தனையே எனக்கு கிடையாது.
மூன்று நாட்களில் மூன்று படங்களுக்கு பின்னணி இசையமைத்த இசையமைப்பாளர் உலகத்திலேயே நான் மட்டும்தான். ஆனால் இப்போதெல்லாம் இசையமைக்க 6 மாதங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். சிலரோ ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார்கள். ஏன் என்றால் அது அவர்களுக்கு வரவில்லை என்பதுதான் காரணம்” என்றார். அவரது இந்தப் பேச்சுக்கு ஒருசேர ஆதரவும், விமர்சனமும் எழ ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











