மேடைக் கச்சேரியிலும் கூட சிறு தவறு வரக்கூடாது- இளையராஜா கறார்!
சினிமாவுக்கான பாடல் பதிவாக இருந்தாலும் சரி, மேடை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கச்சிதமாக வாசிக்க வேண்டும், பாட வேண்டும். அதில் சிறு தவறு கூட நேரக் கூடாது என்கிறார் இசைஞானி இளையராஜா.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் சங்கீதத் திருவிழா வருகிற 5 - ம் தேதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இளையராஜாவின் மகனும், திரைப்பட இசையமைப்பாளருமான கார்த்திக்ராஜா நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜா, அவருடைய மகன் கார்த்திக்ராஜா மற்றும் இசைக்குழுவினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

கார்த்திக் ராஜா
இசை நிகழ்ச்சி குறித்து கார்த்திக்ராஜா கூறுகையில், "இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியில் எங்கள் குடும்பத்தினர், பாடகர்கள் மனோ, விஜய்பிரகாஷ், ஹரிகரன், எஸ்.என்.சுரேந்தர், சித்ரா, சாதனா சர்க்கம், உமா ரமணன், ஷாலினி, ரம்யா உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் எனது தந்தையுடன் கடந்த 38 ஆண்டுகளாக உடனிருந்து பணியாற்றிய 80 இசைக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்," என்றார்.

இளையராஜா
இளையராஜா பேசுகையில், "இது, நான் குணமான பிறகு பங்கேற்கும் முதல் இசை நிகழ்ச்சி. இதில் பாடுவதற்காக நிறைய பாடல்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.
இடையிடையே நானும் பாடுவேன். கனடா, மலேசியா, லண்டன், ஆஸ்திரேலியா என பல வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் நிறைய பேர் வருகிறார்கள். மக்களை மகிழ்ச்சிப் படுத்தவே இங்கு வந்துள்ளேன்.

பிழைகள்
ரெக்கார்டிங் தியேட்டரில் பாடும் போது சிறிதளவு கூட பிழைகள் ஏற்படாது. ஆனால் நேரடியாக பாடும் போது பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அது நிகழாத வண்ணமும், ரிக்காடிங் தியேட்டரில் இசையமைத்த பாடல்கள் போன்றும் இங்கு பாடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

சோர்வில்லை
நான் தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறேன். இசையினால் எனக்கு சோர்வு வராது. எனவே மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு தொடர்ந்து இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.

பாலா, பால்கி
இந்த நிகழ்ச்சிக்கு டைரக்டர்கள் பாலா, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், மிஸ்கின், பால்கி உள்ளிட்ட பலர் வருகிறார்கள். இதில் எனது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கிளப் அறிமுக விழாவும் நடைபெறும்," என்றார்.


Click it and Unblock the Notifications











