பிப் 2-ல் சென்னையில் இளையராஜா ரசிகர்கள் கூட்டம்.. ராஜாவின் அரிய பாடல்கள் பற்றி கலந்துரையாடல்!
இளையராஜா பற்றியோ அவர் இசையின் மகத்துவம் பற்றியோ புதிதாக சொல்ல வேண்டியதில்லை. அவர் இசைக்கு யாராவது ரசிகர்களாக இல்லாமலிருந்தால்தான் அது புதிய செய்தி.
ஆனால் இளையராஜா யாஹூ குரூப்... இந்திய சினிமாவில் ஒரு இசையமைப்பாளருக்காக உருவான முதல் ஆன்லைன் ரசிகர்கள் குழு என்றால்... அநேகமாக இந்த குழுவாகத்தான் இருக்கும்.

5,000 பேரைத் தாண்டிவிட்டது....
இன்று நேற்றல்ல 1999-ம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்த யாஹூ குழுவை கோவையைச் சேர்ந்த டாக்டர் விஜய் வெங்கட்ராமன் தொடங்கினார். இன்று குழு உறுப்பினர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5000 பேரைத் தாண்டிவிட்டது.

நேர்மையான செயல்பாட்டுக்கு சாட்சி...
இந்த ரசிகர்கள் பற்றி ராஜாவுக்கும் தெரியும் என்பதுதான் மிக முக்கியமானது. பொதுவாக இப்படியெல்லாம் அனுமதிப்பவரில்லை ராஜா. ஆனால் அவர் இந்தக் குழுவை மட்டும் மவுனமாக அனுமதிப்பதே அதை உருவாக்கியவரின், உறுப்பினர்களின் வெளிப்படையான நேர்மையான செயல்பாட்டுக்கு சாட்சியாக உள்ளது.

அங்கத்தினர்கள் கூடி...
திருவாசகம், தி மியூசிக் மெசையா போன்ற இசைத் தொகுப்புகள் வெளியானபோது, தன்னார்வலர்களாக இந்த குழு உறுப்பினர்கள் மற்றும் டாக்டர் விஜய் பங்கேற்று ராஜாவின் இசைக்காக தங்கள் உழைப்பைத் தந்தனர்.
ஆண்டுக்கு ஒரு முறையோ இருமுறையோ ஏதாவது ஒரு நகரில் குழுவின் அங்கத்தினர்கள் கூடி இளையராஜாவின் பாடல்கள் பற்றி கலந்துரையாடுவதை ஒரு முக்கிய கடமையாகவே வைத்துள்ளனர்.

ஆய்வு செய்வார்கள்...
ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பில் இந்த கலந்துரையாடல் இருக்கும். சில சமயம் அந்த ஆண்டு இளையராஜா இசையமைத்த புதிய பாடல்கள்... அல்லது திரைப்பட பாடல்கள் அல்லாமல் ராஜா இசையமைத்த ஆல்பங்கள், பக்திப் பாடல்கள் என வித விதமான தலைப்புகளில் பாடல்களை ஆய்வு செய்வார்கள்.

நுணுக்கமாக விவாதிக்கும் அறிவைப் பெற்றவர்கள்...
இந்தக் குழு உறுப்பினர்களின் சிறப்பே.. இளையராஜா இசையை அதன் ராகம், தாள அமைப்பு, இசையாக்க அழகு என நுணுக்கமான அலசி ரசிக்கும் பாங்குதான். இத்தனைக்கும் இவர்கள் இசையில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்லது இசையை முழுமையாகக் கற்றவர்கள் என்று கூட சொல்ல முடியாது. ஆனால் இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக் கேட்டே, இசையை நுணுக்கமாக அலசும் அளவுக்கு அறிவைப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய கூட்டங்களுக்கு தவறாமல் செல்லும் ஒருவரால் நிச்சயம் இளையராஜாவின் இசைகுறித்த ஆய்வுக் கட்டுரையே சமர்ப்பிக்க முடியும்.

பல் மருத்துவர் ஸ்ரீதர் முருகையன்
இந்தக் குழுவில் உள்ள பலரும் ராஜாவின் பாடல்களை கூட்டத்தில் மனம் லயித்துப் பாடுகிறவர்கள். நல்ல குரல் வளம் கொண்டவர்களும்கூட. திருவண்ணாமலையைச் சேர்ந்த பல் மருத்துவரான ஸ்ரீதர் முருகையன் இந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர். இளையராஜா முன்னிலையில் பாடி, அவரிடம் பாராட்டுப் பெற்றவர். குழுவின் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்றுப் பாடுபவர்.

இளையராஜாவும் ரசிகர்களுமே சாட்சி...
நல்ல இசை ஒரு மனிதனை எந்த அளவு செழுமைப்படுத்தும் என்பதற்கு இளையராஜாவும் இதுபோன்ற ரசிகர்களுமே சாட்சி.
இந்தக் கூட்டத்துக்கென்றே வெளியூர்கள்.. ஏன் வெளி மாநிலங்களிலிருந்தும் கூட உறுப்பினர்கள் வருவது வழக்கம். இந்த முறை நடப்பது 28வது கூட்டம். இதில் இளையராஜாவின் அதிகம் அறியப்படாத அரிய பாடல்கள் (Rare Songs of Early Ilaiyaraaja) பற்றி விவாதிக்கப் போகிறார்கள். 1976 முதல் 1982 வரை ராஜா இசையமைத்த பாடல்களில், டிவி, வானொலிகளில் அதிகமாக கேட்கப்படாத பாடல்கள் பற்றித்தான் பேசப் போகிறார்கள்.

பங்கேற்க விரும்புவோர்...
இந்த கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 31-ம் தேதி பிற்பகல் 11.59க்குள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

கூட்டம் நடக்கும் இடம் மற்றும் முகவரி:
ஆஷா நிவாஸ் சோஷியல் வெல்பேர் சென்டர்,
ரட்லண்ட் கேட் 5 வது தெரு, ஸ்ரீராம்புரம், ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.
தொடர்புக்கு - 044-28333311, 28330772, 28331601.
Asha Nivas Social Welfare Centre, Rutland Gate 5th St, Srirampuram, Thousand Lights, Chennai - 600006. Phone: 044-28333311, 28330772, 28331601.


Click it and Unblock the Notifications











