புயல் வீசத் தொடங்கிவிட்டால்.. ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.. வைரமுத்து ட்வீட்!
சென்னை: மொழி பெரியதா, இசை பெரியதா என்ற விவாதம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கங்கை அமரன் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசியது சமூகவலைத்தள பக்கத்தில் பேசுபொருளாகி பலரும் வைரமுத்துவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வைரமுத்து இன்று மீண்டும் ட்விட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
படிக்காத பக்கங்கள் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, ஒரு பாடலில், இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இதைப்புரிந்து கொண்டவன் ஞானி. இதைப்புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருந்தார்.

கங்கை அமரன் ஆவேசம்: வைரமுத்து பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இளையராஜாவை விமர்சித்து தான் அந்த கருத்தை வைரமுத்து தெரிவித்து இருந்தார் என்று சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பதிவானதை அடுத்து, இசையமைப்பாளரும் இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன், வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
விளைவுகளை சந்தீப்பீங்க: வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் நல்ல மனிதன் இல்லை என்றும், தன்னை வளர்த்துவிட்ட இளையராஜாவின் போட்டோவை தினமும் வைத்து கும்பிடவேண்டும் என்றும். இனிமேல் இளையராஜாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இளையராஜா இல்லை என்றால் இன்று வைரமுத்து என்ற பெயரே இருக்காது என்று பேசி இருந்தார்.

வைரமுத்து ட்வீட்: கங்கை அமரன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் வைரமுத்துவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் இளையராஜா , வைரமுத்து விவகாரமே வைரலாகி வருகிறது. இந்நிலையில், வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்
புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்
வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்
மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன் குரலைத்
தணித்துக்கொள்ள வேண்டும்
அதுதான்
நடந்து கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











