நம்மைத் தேடி "இசைக் கிளி".. இளையராஜா.. ராக தேவனாக மாறி 45 வருஷமாச்சு!
சென்னை : திரையிசையில் மிகப் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. பட்டிதொட்டி துவங்கி, சர்வதேச அரங்கு வரை இவரது இசை ஒலிக்காத இடமில்லை. 1976 ல் அன்னக்கிளி படத்தில் துவங்கிய இவரது சாதனைப் பயணம், தற்போது 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1976 ம் ஆண்டு மே 14 ம் தேதி தான் இளையராஜா முதன் முதலில் இசையமைத்த அன்னக்கிளி படம் ரிலீசானது.
அன்று முதல் இன்று வரை காதல், மெலடி, சோகம், தாலாட்டு, துள்ளல் ஆட்டம், மனதை வருடும் பாடல்கள் என எந்த உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் அனேகமாக அனைவரின் தேர்வும் இளையராஜா இசை தான். அந்த அளவிற்கு இசையால் பல கோடி மனங்களை கட்டிப் போட்டவர். கடந்த 45 ஆண்டுகளில் 1000 க்கும் அதிகமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

முதல் இந்திய இசையமைப்பாளர்
பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பலவகையிலும் தமிழ் மட்டுமின்றி இந்திய திரையுலகத்தில் அழுத்தமாக தடம் பதித்தவர் இளையராஜா. இதுவரை 7000 க்கும் அதிகமான பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். 20,000 க்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகள் செய்துள்ளார். திருவாசகத்திற்கு இசை அமைத்த முதல் இந்திய இசையமைப்பாளர் இளையராஜா தான்.

5 முறை தேசிய விருது
இதுவரை 5 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றவர் இளையராஜா. லண்டன் டிரைனிட்டி இசை கல்லூரியில் கிளாசிக்கல் கிட்டார் இசைக்காக தங்க பதக்கம் பெற்றவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொழிகளிலும் தனது இசை திறமையை நிரூபித்தவர்.

45 நிமிடங்களில் 9 பாடல்கள்
இந்திய சினிமாவின் தலைசிறந்த 25 இசையமைப்பாளர்களின் இளையராஜாவும் ஒருவர். ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்திற்காக 45 நிமிடங்களில் 9 பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பல சாதனைகளை படைத்த இளையராஜா, தனது இசைப் பயணித்தில் ஏராளமான பாடகர்கள், பாடகிகளை அறிமுகம் செய்துள்ளார்.

தொடரட்டும் இவரின் இசைப்பயணம்
இசையில் பல புதுமைகளை புகுத்திய இளையராஜா, 1970 களில் தொடங்கி, தற்போதைய தலைமுறைக்கும் ஏற்றவாறு இசையமைத்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர். தற்போது 10 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது இசைப்பயணம் இன்னும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











