கவிஞர் காமகோடியான் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு… இளையராஜா இரங்கல் !
சென்னை : கவிஞர் காமகோடியான் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் காமகோடியன், இன்று காலமானார். அவருக்கு வயது 76.
அவரது மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கவிஞர் காமகோடியான்
தமிழ் திரையுலகில் 1980களில் பிரபலமாக இருந்த பல சூப்பர் ஹிட் பாடல்களை கவிஞர் காமகோடியன் எழுதியுள்ளார். கவிஞர் காமகோடியன் சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே படத்தில், ௭ன் அன்பே ௭ன் அன்பே என்ற பாடலை எழுதி இருந்தார். இந்த பாடல் இன்று வரை காதலர்கள் கொண்டாடும் பாடலாக உள்ளது.

காலமானார்
பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதி உள்ளார். இவர் கடைசியாக திருட்டு ரயில் திரைப்படத்திற்கு பாட்டு எழுதி இருந்தார். அதன்பின் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த காமகோடியன், இன்று காலமானார்.

இளையராஜா இரங்கல்
காமகோடியான் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கவிஞர் காமகோடியான் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு வரப்பிரசாதம் திரைப்படத்தில் வேலை செய்யும்போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும். அப்பொழுதே தனக்கு தமிழ்ப் பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார்.

ஈடு செய்ய முடியாத இழப்பு
அவர் நம்முடைய எம்.எஸ்.வி அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடை கச்சேரிகளில் கவிஞர் காமகோடியான் எழுதிய மனிதனாயிரு என்ற தனிப்பாடலை எம்.எஸ்.வி அண்ணா பாடியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. என்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். அன்னார் மறைவு நம் தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என்று இளையராஜா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











