கடந்த ஆண்டு இளையராஜா மகள்.. இந்த ஆண்டு பாரதிராஜா மகன்.. வாரிசுகளை இழந்து நிற்கும் இமயங்கள்..
சென்னை: தமிழ் திரையுலகின் அடையாளங்களாக இருப்பவர்களில் மிக மூத்த கலைஞர்களாக இருப்பவர்கள், இசைஞானி இளையராஜாவும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும். நெருங்கிய நண்பர்களான இருவரும் தங்களது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர்கள். சினிமாவில் இருவரும் ஒருசேர வளர்ந்தவர்கள், தங்களது முதுமைக் காலத்திலும் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் உயிரிழந்துள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இசைஞானி இளையரஜாவின் மகள், பவதாரிணி. பாடகி மற்றும் இசையமைப்பாளரான இவர், கடந்த ஆண்டு புற்றுநோய் காரணமாக சிகிச்சையில் இருந்தபோது, சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துவிட்டார். இலங்கையில் சிகிச்சைக்காகச் சென்ற அவர், இலங்கையிலேயே உயிரிழந்தார். இவர் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அவரது 47 வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இளையராஜாவின் குடும்பத்தினர் மிகவும் உடைந்து போனார்கள். அண்மையில் கூட அவருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை இசை அஞ்சலியாக செலுத்தினர். பவதாரிணி மறைவின் போது, இளையராஜாவின் நெருங்கிய நண்பரான பாரதிராஜா " என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" என தெரிவித்திருந்தார்.

இளையராஜா: இந்நிலையில் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இன்று அதாவது, மார்ச் 25ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவுச் செய்தி கேட்ட இளையராஜா பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய நண்பன் பாரதியின் மகனான மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன். என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நடந்திருக்க வேண்டாம். நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது, ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என காலம் விதித்திருக்கின்ற காரணத்தினால், மனோஜ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வாரிசுகள்: கடந்த ஆண்டு இளையராஜாவின் மகளான பவதாரிணி தனது 47 வது வயதில் புற்றுநோய் காரணமாக இறந்தார். இந்நிலையில், பாரதிராஜாவின் மகன் மனோஜ் அவரது 48வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழ் திரையுலகின் மிக மூத்த கலைஞர்களின் வாரிசுகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் உயிரிழந்திருப்பது, திரையுலகத்தினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











