பவதாரிணி நினைவேந்தல் நிகழ்ச்சி.. துக்கம் தாளாமல் அழுத கார்த்திக் ராஜா.. ஆறுதல் சொன்ன இளையராஜா!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி. கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி பாடகி பவதாரிணி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இந்த ஆண்டு அவரது திதி நாளும், அவரது பிறந்த நாளும் ஒரே நாளில் அமைந்ததால், அவரது குடும்பத்தினர் இணைந்து, பவதாரிணிக்கு இசை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சி இளையராஜாவின் உத்தரவினால், ஏற்பாடு செய்யப்பட்டது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் பவதாரிணி பாடிய பாடல்கள் பாடப்பட்டது. அப்போது, பவதாரிணியின் அண்ணனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா, துக்கம் தாளாமல், அழுதுவிட்டார்.
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி, கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி, புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு புற்றுநோய் இருப்பது மிகவும் தாமதமாகத்தான் கண்டறியப்பட்டது. ஆனால் பவதாரிணிக்கு புற்றுநோய் என, அவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இலங்கையில் புற்றுநோய்க்கு, ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதால், அங்கு அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, இளையராஜா குடும்பத்தினரை மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த திரை உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல், பண்ணைபுரத்தில் உள்ள அவரது தாயார் நினைவு இடத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணியின் உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது, இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ' அன்பு மகளே' என பதிவிட்டார். இது ரசிகர்கள் அனைவரையும் நொருங்க செய்தது.
கார்த்திக் ராஜா: பவதாரிணி இறந்து ஒரு ஆண்டு ஆனதைத் தொடர்ந்து, அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இசை நினைவேந்தல் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பவதாரிணி பாடிய பாடல்கள் பாடப்பட்டது. அப்போது பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடல் பாடுவதற்கு, முன்னர், பவதாரிணியின் அண்ணனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா, மனமுடைந்து இளையராஜாவிடம் சென்றார். கார்த்திக் ராஜாவைப் பார்த்த இளையராஜா கையால் சைகை காட்டினார்.

கங்கை அமரன்: அதன் பின்னர் பாடல் பாடப்பட்டது. அப்போது மனமுடைந்த கார்த்திக் ராஜா, கண்ணீரைத் துடைத்து கொண்டு இருந்தார். அருகில் இருந்த, இளையராஜாவின் தம்பியும், இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், கார்த்திக் ராஜாவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அவர் பேசும்போது இப்போதுகூட பவதாரிணி குடும்பத்துடன் அமர்ந்திருப்பதைப் போலவே உள்ளது என பேசிக்கொண்டு இருக்கும் போது மேலும் உடைந்து அழுதார்.

வெங்கட் பிரபு: நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு, "இது எல்லாம் இப்போது நடக்க வேண்டிய விஷயங்கள் இல்லை. பவா எங்களை விட்டுவிட்டு இவ்வளவு சீக்கிரம் போவாள் என நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த ஆண்டு புத்தாண்டில், கோட் படத்தில் பவாவிற்கு ஒரு பாடல் இருக்கு, பாட வேண்டும் எனக் கூறினேன். ஆனால் அதற்குள் பவா இறந்துவிட்டார்" என உருக்கமாக பேசினார்.



Click it and Unblock the Notifications











