மகளை பறிகொடுத்தேன்.. பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை.. இளையராஜா உருக்கம்!
சென்னை: இசையின் அடையாளமாக பார்க்கப்படும் இளையராஜாவின் 81வது பிறந்த நாளை ரசிகர்கள் இணையத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மகளை பறிகொடுத்துவிட்டதால், பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசைக்கு மயங்காதவர்கள் இந்த உலகில் உண்டா, அதுவும் இசைஞானியின் இசைக்கு, தலை அசைத்து மனம் மயங்காதவர்களே இருக்க முடியாது, நான்கு தசாப்தங்களாக அவரின் இந்த திரைப்பயணத்தில் எண்ணற்ற இனிமையான பாடல்களை கொடுத்த இசை வித்தகன் இளையராஜா. யாரும் தொடமுடியாத இடத்தில் இருக்கும் இளையராஜாவை கௌரவிக்கும் வகையில் இளையராஜாவின் பயோபிக் உருவாகி வருகிறது.

இளையராஜா பயோபிக்: இந்த வரலாற்று படத்தில் சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இதில், இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், தனுஷ், இளையராஜா தோற்றத்தில் சென்னை சென்ட்ரலில் இறங்கி ஆர்மோனியப் பெட்டியுடன் இருப்பது போன்று இருந்தது. இதையடுத்து இன்று நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இளையராஜா பயோபிக் படத்தின் புது போஸ்டரை வெளியிட்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கொண்டாட்டம் இல்லை: இந்நிலையில், இசைஞானி இளையராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் தான் எனக்கு சொல்லுகிறீர்களே தவிர, என்னுடைய மகளை நான் பறிகொடுத்துவிட்ட காரணத்தினால், இன்று பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை. உங்களுக்காகத்தான் இந்த கொண்டாட்டம் எல்லாம் என்றார். இளையராஜாவின் மகள் பவதாரிணி பித்தப்பை புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் ஜனவரி மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











