மதுர மரிக்கொழுந்து வாசத்தை அனுபவிக்க தயாராகுங்க..ஜூன் 26-ல் மதுரையில் இளையராஜா கச்சேரி
சென்னை: வரும் ஜூன் 26-ம் தேதி, இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மதுரையில் நடைபெறவிருக்கிறது.
Recommended Video
'இசையென்றால் இளையராஜா' என்ற பெயரில் இந்த இசை நிகழ்ச்சி இளையராஜாவின் மண்வாசனை நிறைந்த பல சூப்பர் ஹிட் பாடல்களோடு ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தவிருக்கிறது.
அதற்கான டிக்கெட்டுகள் விற்பனையும் தற்போது படு ஜோராகத் தொடங்கியிருக்கிறது.

மதுரைன்னாலே மரிகொழுந்து
இந்நிகழ்ச்சி குறித்து இளையராஜா வெளியிட்டிருக்கும் காணொளியில், "மதுரைன்னாலே மீனாட்சி தான், மதுரைன்னாலே மரிகொழுந்து தான் அந்த மாதிரி மதுரையோடு சில விசயங்களை அதிலிருந்து பிரிக்க முடியாது. அந்த மாதிரி மதுரையில தாயா இருந்து நான் கேட்ட தாலாட்டெல்லாம் பாட்டா மாறியது. இப்போது அதே மதுரைக்கு என்னுடைய இசைக்குழுவினரோடு வந்து உங்கள் முன் பாடி மகிழ்விக்க வருகின்றேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

79-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
கடந்த ஜூன் 2-ம் தேதி தான் இளையராஜா தனது 79-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களும், இயக்குநர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதேவேளையில் உலகமெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான இளையராஜா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். "உனக்கும், உன் இசைக்கும், உன் உறவுக்கும், என்றும் வயதில்லை. வாழ்த்துகள் டா" - உயிர்தோழன் பாரதிராஜா என்ற இயக்குநர் பாரதிராஜா வாழ்த்தியிருந்தார். அதேபோல் நடிகர் கமல்ஹாசனும், " இசைக்கு இளைஞர் இளையராஜா. என் மனதுக்கு கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழி பெயர்ப்பவர். பல கோடி மனங்களைக் கனெக்ட் செய்யும் மேஸ்ட்ரோவுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்" என வாழ்த்தியிருந்தார்.

புதிய படங்களில் பிசி
இளையராஜா தற்போது புதிய படங்கள் சிலவற்றுக்கு இசையமைத்து வருகின்றார். 'ஏ பியூட்டிபுல் பிரேக் அப்' என்ற ஆங்கிலப் படம், காதல் செய், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய படம் என அவரது புதிய படைப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. அண்மையில், ஹாலிவுட் வெப்சீரிசான, 'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீசன் 4' -க்கு தீம் சாங்கை இசையமைத்தார் இளையராஜா. அது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களை மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் படுத்தியது.

சர்ச்சை
இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அண்மையில் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார். அது குறித்து சமூக ஊடகங்களில் சில தரப்பினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேவேளையில், அண்மையில் இளையராஜாவுடன் மீண்டும் சேர்ந்த அவரது சகோதரர் கங்கை அமரன் பேட்டி ஒன்றில் இளையராஜா பற்றிய கேள்விக்கு ஏடாகூடமாக பேட்டியெடுத்தவரை வசைபாடினார். ஒருமையில் பேசிய அவரது பேச்சுக்குக் கண்டனங்கள் பெருகியது. இப்படியாக 79 வயதிலும் இளையராஜா இன்னமும் பேசு பொருளாகவும், தனது பாடல்களின் வாயிலாக தினமும் ரசிகர்களையும் சென்றடைகின்றார்.


Click it and Unblock the Notifications











