எந்த தந்தைக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.. பவதாரிணி உடலை பார்த்து சிலையாய் நின்ற இளையராஜா
சென்னை: மறைந்த இசையமைப்பாளரும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் தேனியில் இறுதிச்சடங்கிற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மகளின் உடலை பார்த்த இளையராஜா எதுவுமே பேச முடியாமல் சிலையாக நின்ற காட்சிகள் அனைவரையும் உடைய செய்துள்ளது.
ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த மகள் தனது கண்களுக்கு முன்பாக கண்ணாடி பெட்டியில் உயிரிழந்த உடலாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்தமாக உடைந்து போய் விட்டார் இளையராஜா.

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு: தேனி, பண்ணைபுரத்தில் பிறந்து வளர்ந்து சினிமா மீதும் இசை மீதுமுள்ள ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்து இசையமைப்பாளராக மாறிய இளையராஜா தனது மனைவி மறைந்த போது சொந்த ஊரில் அடக்கம் செய்த நிலையில், தற்போது புற்றுநோய் பாதிப்புக் காரணமாக உயிரிழந்த தனது மகளையும் சொந்த ஊரிலேயே இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்ய உள்ளார்.
தேனி வந்த இளையராஜா: இலங்கையில் இருந்து சென்னைக்கு பவதாரிணியின் உடல் கொண்டு வந்த நிலையில், சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் நள்ளிரவு சென்னையிலிருந்து தேனிக்கு பவதாரிணியின் உடல் கொண்டு வரப்பட்டது. தேனியில் பவதாரிணியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு வரும் நிலையில், மகளை பார்த்து இளையராஜா கலங்கி நிற்கும் காட்சிகள் பதை பதைக்க வைக்கின்றன.
சிலையாக மாறிய இளையராஜா: கண்ணாடி பெட்டியில் ஏகப்பட்ட மாலைகள் சூழப்பட்ட நிலையில், தனது செல்ல மகள் பவதாரிணியை உயிரற்ற நிலையில் கண்டு எதுவுமே பேச முடியாமல் அவர் அருகே சென்று அப்படியே பார்த்துக் கொண்டே சிலையாக மாறிய இளையராஜாவை பார்த்து ரசிகர்களும் அங்கிருந்த பிரபலங்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கதறி அழுத பாரதிராஜா: "எந்தவொரு தந்தைக்கும் இந்த நிலைமை வரக்கூடாது" என இளையராஜாவை பார்த்து அவரது கைகளை இறுகப்பற்றிக் கொண்டு பாரதிராஜா கதறி அழுது ஆறுதல் சொன்ன காட்சிகளும் வெளியாகி உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஊர் மக்கள் கண்ணீர் அஞ்சலி: பவதாரிணியின் உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த ஊர் மக்கள் மற்றும் இளையராஜாவின் உறவினர்கள் அனைவரும் இசை தேவதைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய காட்சிகளும் வெளியாகி உள்ளன. 47 வயதெல்லாம் உயிரிழக்கக் கூடிய வயதா என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











