என்னை மையப்படுத்தி பொய்யான வதந்தி.. யாரும் நம்ப வேண்டாம்.. இளையராஜா விளக்கம்!
சென்னை: இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கருவறைக்குள் நுழைய முயன்றபோது, அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதுகுறித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள இளைராஜா, என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று, ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய கருவறைக்குள் நுழைந்தார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை தடுத்து நிறுத்தி கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினார்கள்.

கோவில் மரபு: இதைத்தொடர்ந்து, இளையராஜா சாமி கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆண்டாள் சூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. ஆனால், இணையத்தில், அவரை வெளியே நிற்க சொன்ன வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இளையராஜாவை இப்படி இழிவுப்படுத்தலாமா என்று இணையத்தில் அவரது ரசிகர்கள் கொந்தளித்து கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதைத்தொடர்ந்து, இத்திருக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்ச்சகர்கள், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர யாரும் கோயில் கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லை எனவும் காலம்காலமாக இதுதான் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை எனவும் கோயில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பொய்யான வதந்தி: இந்த செய்தி இணையத்தில் பெரும் விவாதப்பொருளானதைத் தொடர்ந்து இளையராஜா, தனது எக்ஸ் தளபக்கத்தில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என பதிவிட்டு வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











