சம்பளம் வாங்கிட்டு இசையமைத்த இளையராஜா ராயல்டி கேட்பது தவறு: எஸ்.ஏ.சி.
கன்னியாகுமரி: இசைஞானி இளையராஜா ராயல்டி கேட்பது சரி அல்ல என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் இசைஞானி இளையராஜாவின் ராயல்டி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது,

ராயல்டி
இளையராஜா ராயல்டி கேட்பது சரி அல்ல. என்ஜினியர், மேஸ்திரி, கொத்தனார் என்று பலர் சேர்ந்து ஒரு வீட்டை கட்டினாலும் கட்டி முடித்த பிறகு அது உரிமையாளருக்கு தான் சொந்தமாகும். இது அனைத்து தொழிலுக்கும் பொருந்தும்.

தயாரிப்பு பணி
படம் தயாரிப்பது சாதாரண விஷயம் அல்ல. வீடு, நிலம் ஆகியவற்றை விற்று, அவமானங்களை சந்தித்து சகித்துக் கொண்டும் தான் படம் தயாரிக்கிறார்கள். இதில் அதிக படங்கள் தோல்வி அடைவது தான் துரதிர்ஷ்டவசமான விஷயம். அனைத்து கஷ்டங்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கே பாடல்களின் உரிமையை கொடுக்க வேண்டும்.

இசையமைப்பாளர்
இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள், நடிகைகள், சண்டை இயக்குனர்கள் என்று அனைவரும் சம்பளம் வாங்கிவிட்டு தான் படத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் யாரும் எங்களுக்கு ராயல்டி வேண்டும் என்று கேட்பது இல்லை. இசையமைப்பாளர் ராயல்டி கேட்பது தவறு. அவருடைய வேலைக்கு சம்பளம் வாங்குகிறார்.

தயாரிப்பாளர்கள்
சம்பளம் வாங்கிக் கொண்டு தான் இசையமைப்பாளர் இசையமைக்கிறார். அப்படி இருக்கும்போது ராயல்டி கேட்கக் கூடாது. பாடல்களின் உரிமை இசையமைப்பாளர் அல்ல மாறாக தயாரிப்பாளர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். இந்த ராயல்டியை பெற தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றார் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











