மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி.. தீவிரவாதிகளை வேட்டையாடும் இந்திய ராணுவத்திற்கு இசைஞானி சப்போர்ட்!
சென்னை: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இந்தியா எப்போது பதிலடி கொடுக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, வரலாற்றில் இன்றைய நாள் விடையாக அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது மட்டும் இல்லாமல் பலர் படுகாயம் அடைந்தார்கள். இதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆண்கள். தீவிரவாதிகள் பெண்களை கொல்லவில்லை.
தனது கணவனைக் கொன்று விட்டீர்கள், என்னையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று தீவிரவாதிகளிடம் மன்றாடிய பெண்ணிடம், " நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம், இங்கு நடந்ததை மோடியிடம் போய்ச் சொல் என்று கூறியதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல், தீவிரவாதிகள் கொல்லும்போது முஸ்லிம் அல்லாதவர்களை மட்டுமே கொன்றதாகவும், நீ இந்துவா இஸ்லாமியனா என்று கேட்டு கேட்டு சுட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இந்த கொடூர தாக்குதலுக்கு பின்னர் பலரும் இந்தியா எப்போது தீவிரவாதிகளை வேட்டையாடும் என்று காத்துக் கொண்டு இருந்தார்கள். பிரதமரும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இப்படி இருக்கும்போது, இன்று அதாவது மே மாதம் 7ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.05 மணி முதல் 1.30 மணி வரை இந்திய ராணுவம் தீவிரவாதிகள் தங்கியுள்ள பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 80 தீவிரவாதிகள் வரை இறந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இந்திய ராணுவம் தனது பதிலடிக்கு ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்தின் இந்த பதில் தாக்குதலுக்காக காத்துக் கொண்டிருந்த இந்திய மக்களுக்கு இந்த தகவல் மிகவும் ஆறுதலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பலரும் இந்திய ராணுவத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். பஹல்காம் கொடூர தாக்குதலுக்கு பின்னர், தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா என்ன வகையான நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் உடன் நிற்கிறோம் என்று அமெரிக்கா தொடர்ந்து தெரிவித்து வந்தது.
இசைஞானி: இந்நிலையில் இந்திய ராணுவமே தீவிரவாதிகள் மீது பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து மாநிலங்களவை உறுப்பினர், இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய ராணுவத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதாவது இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி" என்று பதிவிட்டுள்ளார்.
ரஜினி - விஜய்: ஏற்கனவே இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது எக்ஸ் பக்கத்தில், " போராளிகளின் சண்டை தொடங்கியது. நோக்கம் ஈடேறும் வரை இதை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம். மொத்த நாடும் உங்களுடன் உள்ளது பிரதமர் மோடி. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகரும் தவெக தலைவருமான விஜய் இந்த சம்பவம் தொடர்பாக, " இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!" என்று பதிவிட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் இந்த செயலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











